UPSC Lateral Entry: `முற்றிலும் தவறு… அரசிடம் கேள்வியெழுப்புவேன்’- மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) சமீபத்தில், Lateral Entry எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் பணியிடங்களை நிரப்ப விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.

UPSC | யு.பி.எஸ்.சி அலுவலகம்

மத்திய அரசு இவ்வாறு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக நியமனம் செய்வதை எதிர்த்த மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே, “இது தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர்கள் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, ஈ.டபிள்யூ.எஸ் பணியிடங்கள் இப்போது ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். மேலும், இட ஒதுக்கீட்டைப் பறித்து அரசியலமைப்பை மாற்றுவதற்கான பா.ஜ.க-வின் ‘சக்கரவியூகம்’ இது” என்றனர்.

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களும் தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்தனர். இவ்வாறிருக்க, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசில் முக்கிய பங்கு வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான், மத்திய அரசின் இந்த செயலை முற்றிலும் தவறானது என்று தெரிவித்திருக்கிறார்.

சிராக் பஸ்வான்

தனியார் ஊடகத்திடம் இதுகுறித்து பேசிய சிராக் பஸ்வான், “இதுபோன்ற நியமனங்களில் எனது கட்சியின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. எந்தவொரு அரசுப் பணி நியமனமாக இருந்தாலும் அதில் இட ஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்பட வேண்டும். இருப்பினும், தற்போது வெளியாகியிருக்கும் இந்த செய்தி எனக்கு வருத்தமளிக்கிறது. ஏனெனில், இந்த அரசில் நானும் ஓர் அங்கமாக இருக்கிறேன். இது முற்றிலும் தவறானது. எனவே, நாங்கள் இதற்கு முற்றிலுமாக ஆதரவாக இல்லை என்பதை எனது கட்சி சார்பில் வெளிப்படுத்துவேன். மேலும், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் கேள்வியெழுப்புவேன்” என்று கூறினார்.