`இன்னொரு பாலியல் வன்கொடுமை வரை காத்திருக்க முடியாது..’ – மே.வ அரசிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

கொல்கத்தாவில் ஆர்.ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நாட்டையே உலுக்கியிருக்கிறது. மேலும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியிருப்பது, மேலும் இந்த விவகாரத்தை தீவிரமாக்கியிருக்கிறது.

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை – மருத்துவர்கள் போராட்டம்

இதனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிவேண்டியும், மருத்துவமனைகளில் பயிற்சி பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியும் நாடு முழுவதிலும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்னொருபக்கம், சிபிஐ-யும் இதில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. பின்னர், உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரிக்க தாமாக முன்வந்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு இன்று விசாரணையைத் தொடங்கியது.

அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட், “இந்த வழக்கை நாங்கள் தாமாக முன்வந்து எடுக்க முடிவு செய்ததற்குக் காரணம், இது கொல்கத்தாவிலுள்ள மருத்துவமனையில் நடந்த ஒரு குறிப்பிட்ட கொலை தொடர்பான விவகாரம் அல்ல. இது இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான முறையான சிக்கல்களை எழுப்புகிறது. பாதுகாப்பு விஷயங்களில், பொது மருத்துவமனைகளில் இளம் மருத்துவர்கள் குறிப்பாக வேலை மற்றும் பாலினத்தின் அடிப்படையில் பாதிப்புக்குள்ளாகும் பெண் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது மிகுந்த கவலையளிக்கிறது.

உச்ச நீதிமன்றம்

பெண்கள், தாங்கள் வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பாக உணரவில்லையென்றால், அது சம உரிமையை மறுப்பதாகும். அவர்களுக்கான, பாதுகாப்பு நிபந்தனைகள் அமல்படுத்தப்படுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும். அதுவும், இன்னொரு பாலியல் வன்கொடுமை நிகழும்வரை காத்திருக்க முடியாது. எனவே, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களை உள்ளடக்கிய 10 பேர் கொண்ட `தேசிய பணிக் குழு (National Task Force)’ ஒன்றை நீதிமன்றம் உருவாக்குகிறது” என்றார்.

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் மேற்கு வங்க அரசை சரமாரியாகக் கேள்வியெழுப்பிய சந்திரசூட், “குற்றம் நடந்திருப்பது அதிகாலையில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கல்லூரி முதல்வர் இதை தற்கொலை என்கிறார். அதன் பின்னர், சில மணிநேரங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலைப் பார்க்க அவரின் பெற்றோருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதையடுத்து, பிற்பகல் 1 மணி முதல் 4:45 மணிவரை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, இரவு 8:30 மணியளவில் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இரவு 11:45 மணிக்குத்தான் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

தலைமை நீதிபதி சந்திரசூட்

எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய மருத்துவமனையில் யாரும் இல்லையா? மருத்துவமனையில் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பிரேத பரிசோதனையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவரவில்லையா? கல்லூரி முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்? எதற்காக முதலில் இதைத் தற்கொலை என்று சொல்ல முயற்சித்தார்கள்? கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்த பிறகு அவருக்கு வேறு மருத்துவமனையின் பொறுப்பு ஏன் வழங்கப்பட்டது?

ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு மருத்துவமனையை ஒரு கும்பல் ஆக்கிரமித்து, முக்கிய பகுதிகளை சேதப்படுத்திய போது போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது? குற்றம் நடந்த இடத்தை பாதுகாப்பதுதானே போலீஸாரின் முதல் வேலை? மேலும், இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், இறந்த உடலின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஊடகங்களில் பரவியது வேதனையளிக்கிறது. இதுதான் உயிரிழந்த இளம் மருத்துவருக்கு வழங்கப்படும் கண்ணியமா?” என்று கேட்டார். மேலும், மருத்துமனைகளிலுள்ள பிரச்னைகளைப் பட்டியலிட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, “இரவுப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் ஓய்வெடுக்க போதுமான அறைகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக பணி அறைகள் இல்லை. பயிற்சி மருத்துவர்கள் 36 மணிநேரம் வேலை செய்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் கழிப்பறை வசதி உட்பட அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை.

மம்தா – சிபிஐ

போதுமான பாதுகாப்பு பணியாளர்கள் இல்லை. மருத்துவர்கள் தங்கியிருக்கும் இடம், மருத்துவமனையிலிருந்து தொலைவில் இருக்கிறது. போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. மருத்துவமனைகளைக் கண்காணிப்பதற்குச் சரியாகச் செயல்படும் CCTV கேமராக்கள் இல்லை. நோயாளிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைத்து இடங்களுக்கும் செல்ல தடையற்ற அனுமதி இருக்கிறது. மேலும், வெளிச்சமற்ற பகுதிகள் மருத்துவமனைக்குள் இருக்கின்றன” என்று குறிப்பிட்டது.

அதைத்தொடர்ந்து, வியாழக்கிழமைக்குள் விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல்செய்யுமாறு சி.பி.ஐ-க்கு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. கூடவே, கும்பலால் மருத்துவமனை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.