காதலர்களை மிரட்டி ஜிபே-வில் பணம் பறிப்பு; டிஜிட்டல் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!

தஞ்சாவூர் அருகே உள்ள அதினாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் வயது 24. இவர், இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு அந்தப் பெண்ணுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இளம்பெண்ணை அவரின் சொந்த ஊரான அரியலுார் மாவட்டம், திருமானுாரில் விடுவதற்காக தமிழரசன் தனது பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.

ஜிபே

தஞ்சாவூர் – திருவையாறு பைப்பாஸ் சாலை எட்டுகரம்பை பகுதியில் சென்றபோது, இளம்பெண் வாந்தி வருவதாக கூறியதால், தழிழரசன் பைக்கை சாலையோரத்தில் நிறுத்தியுள்ளார். அப்போது, இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் தமிழரசனையும், இளம்பெண்ணையும் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால், கொலை செய்து விடுவோம் என்றுள்ளனர். இருவரும் எங்களிடம் பணம் இல்லை என்றுள்ளனர்.

அதன் பிறகும் விடாத அந்த திருட்டு கும்பல், பணத்தை திருட மாற்றி யோசித்துள்ளனர். `உங்கள் வீட்டில் யாரிடமாவது ஜிபே மூலம் பணத்தை அனுப்ப சொல்லுங்கள்’ என்றுள்ளனர். பணத்தை கொடுத்தால்தான் இந்த இடத்திலிருந்து செல்லலாம் என்றுள்ளனர். பயத்தில் இளம்பெண் தனது சகோதரிக்கு போன் செய்து தமிழிரசன் ஜிபே நம்பருக்கு பணம் அனுப்ப சொல்லியுள்ளார். அவரும் ரூ.1,000 அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட அந்த திருட்டு கும்பலில் ஒருவன் தமிழரசன் ஜிபே நம்பரிலிருந்து தனக்கு ஜிபே செய்துள்ளான். இதையடுத்து பின்னாளில் தனக்கு சிக்கல் வரும் என பயந்த தமிழரசன், இரண்டு நாள்களுக்குப் பிறகு தங்களிடம் மர்ம கும்பல் திருட்டில் ஈடுபட்டது குறித்து கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், வழிப்பறி செய்தவர்கள் ஜிபேவில் பணம் அனுப்பி கொண்ட நம்பரை வைத்து விசாரணை தொடர்ந்தனர். இதில் தஞ்சாவூர் வடக்கால் பகுதியைச் சேர்ந்த பாபு 24, மணிகண்டன் 27, வல்லரசன் 21, சார்லஸ் 29, ரெட்டிபாளையம் மெயின் சாலையை சேர்ந்த விக்கி ஆகியோர் காதலர்களை மிரட்டி டிஜிட்டல் பண வழிப்பறியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாபு, மணிகண்டன், வல்லரசன், சார்லஸ் ஆகிய நான்கு பேரை போலீஸார் கைதுசெய்ததுடன், தலைமறைவாக உள்ள விக்கியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.