குரங்கு கடித்ததால் பாதிக்கப்பட்டவர் சிவகங்கை, அரசு மருத்துவமனையில் குரங்குபோல நடந்துகொண்டார், மக்களை தாக்கினார் என்ற செய்தியுடன் வீடியோ பரவியதால் பரபரப்பு ஏறட்டது. இன்னொரு பக்கம், ’இல்லை, அவர் குரங்கால் கடிபட்டவர் அல்ல’ என்ற தகவலும் வந்ததால், மக்கள் குழம்பிப் போனார்கள்.
இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலை சேர்ந்தவர் சரவணன். மனநலம் பாதிக்கப்பட்ட அவர் காளையார்கோயில் அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சை எடுத்து வந்ததுள்ளார்.
மனநோயின் தீவிரம் அதிகரித்த நிலையில், காளையார்கோயில் அரசு மருத்துவமனைக்கு சரவணனை அழைத்துச் சென்றபோது, அங்கு சிகிச்சை அளிக்க மனநல மருத்துவர் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆம்புலன்ஸிலிருந்து இறங்க மறுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் வர மறுத்த சரவணனை கஷ்டப்பட்டு மருத்துவமனைக்குள் கொண்டு வந்தனர். அங்கிருந்த கதவில் ஏறி தொங்கியபடி, விசித்திரமாகக் கத்தியபடி சத்தம் போட்டார். அவரை கதவில் இருந்து இறக்கிவிட முயன்ற பாதுகாவலர்களை காலால் தாக்கினார். இதை பார்த்த சிலர், இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்தனர். மேலும், சரவணனை குரங்கு கடித்ததாகவும், அதனால்தான் இப்படி குரங்குபோல நடந்துகொள்கிறார் என்று தகவலை பரப்பினர்.
பின்னர், பாதுகாவலர்கள் ஒரு வழியாக அவரை கட்டுப்படுத்தி, கீழே இறங்கச் செய்து, சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். இதனால், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மன நோயாளியின் செயலை குரங்கு கடித்ததாக பரப்பி மக்கள் மத்தியில் தவறான தகவலை சிலர் பரப்பியுள்ளனர்’ என்றனர்.