US Democratic Event: `ஜோ, உங்களின் தலைமைக்கும் சேவைக்கும் நன்றி…’ – பைடனிடம் கூறிய கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவில் இன்னும் மூன்று மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதேசமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், அவரின் சமீபகால உடல்நல தளர்வு, ஊடக நேர்காணல்களில் உளறுவது போன்ற செயல்கள் விமர்சனத்துக்குள்ளாகவே, துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஜோ பைடன்

கமலா ஹாரிஸ் Vs ட்ரம்ப் என்ற தேர்தல் களம் சூழலில், கமலா ஹாரிஸ் வெற்றிபெற்று அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் என்ற சாதனை படைப்பார் என ஆளும் ஜனநாயக கட்சியினர் நம்புகின்றனர். இந்த நிலையில், நாட்டுக்குப் பணியாற்றியதற்காக பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்திருக்கிறார்.

சிகாகோவில் நேற்று தொடங்கிய ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் முதல்நாளில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், “உங்களின் வரலாற்றுத் தலைமைக்கு நன்றி ஜோ. வாழ்நாள் முழுவதும் நம் நாட்டுக்கு சேவை செய்ததற்காக என்றென்றும் உங்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

கமலா ஹாரிஸ்

நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் இங்கு வந்திருக்கிறோம். நவம்பரிலும் நாம் ஒன்று கூடுவோம் நாங்கள் முன்னேறி வருகிறோம் என்பதை ஒரே குரலில் அறிவிப்போம். போராடும்போது வெற்றி பெறுவோம் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்” என்றார்.

கமலா ஹாரிஸ்

வழக்கமாக இது போன்ற தேசிய மாநாட்டில் அதிபர் வேட்பாளர்கள் கடைசி நாளில் உரையாற்றுவார்கள் என்ற சூழலில், வழக்கத்துக்கு மாறாக கமலா ஹாரிஸ் இவ்வாறு உரையாற்றியது மக்களிடமிருந்து பெரும் ஆரவாரத்தைப் பெற்றது. இந்த மாநாடு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.