சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக், நாடு திரும்பியதும் மீண்டும் தனது உணவகப் பணியைத் தொடர்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. எப்போதும் போல தடகள போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி பதக்கப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் சீனா, இம்முறை 2வது இடத்தைப் பெற்றது. அந்த நாடு 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களை அள்ளியது.
சீனாவைச் சேர்ந்த 18 வயதே நிரம்பிய வீராங்கனை சோ யாக் (Zhou Yaqin), ஜிம்னாஸ்டிக்ஸில் பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பதக்கம் அணிவிப்பு நிகழ்வின்போது போடியத்தில் அதே பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற இத்தாலி வீராங்கனைகள் பதக்கத்தைக் கடித்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அதைப் பார்த்து அழகான ரியாக்ஷன் கொடுத்திருந்தார் சோ யாக். அந்தக் காட்சிகள் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. சீன வீராங்கனையின் புன்னகையை பலரும் ரசித்து பாராட்டினர்.
இந்த நிலையில், வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்பிய பின்னர் சோ யாக் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில், வீராங்கனை சோ யாக்கின் பெற்றோர் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சோ யாக் உணவு பரிமாறும் காட்சி வெளியாகி இருக்கிறது. ஒலிம்பிக் ஜெர்சியை அணிந்தபடி வாடிக்கையாளர்களுக்கு அவர் உணவு பரிமாறி வருகிறார். தங்கள் குடும்பத்தின் உணவகத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் அவர் இதனைச் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக X சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் வீடியோவை பகிர்ந்துள்ளார். அத்துடன், “அழகான இந்த சீன ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சோ யாக்கினை நினைவிருக்கிறதா? ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு, விடுமுறைக்காக தன் பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். நிச்சயமாக, நீங்கள் அதை விடுமுறை என்று அழைக்க முடியாது. ஏனென்றால் அவர் தன் பெற்றோர் நடத்தும் உணவகத்தில் வேலை செய்ய உதவுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பயனர் ஒருவர், “யாகின் தனது ஒலிம்பிக் வெற்றியை குடும்பப் பொறுப்புகளுடன் சமநிலைப்படுத்துவதைப் பார்ப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. அவர் மிகவும் பணிவானவர்!” என்று புகழ்ந்துள்ளார்.
மற்றொருவர், “கடினமாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் உன்னதமான ஒரு வேலை. இதற்காக அந்த வீராங்கனை பெருமைப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னொருவர், ” இதை நம்ப முடியவில்லை. அப்பெண் மிகவும் அடக்கமானவர். நான் சாப்பிடச் செல்லும் சீன உணவகங்களில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் நிறைய குழந்தைகள் தங்கள் பெற்றோர்/குடும்பத்திற்கு உதவுவதை நான் காண்கிறேன்” என்கிறார்.
ஆனால், “விளையாட்டு உடை அணிந்து உணவு பரிமாறுவதன் மூலம் இது ஒரு சிறந்த சந்தைப்படுத்தல் உத்தி” என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள்.