UPSC Lateral Entry: கிளம்பிய எதிர்ப்பு… நியமன அறிவிப்பை ரத்து செய்த மத்திய அரசு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் என 45 பணியிடங்கள் Lateral Entry எனும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவிருப்பதாக, UPSC நிர்வாகம் வெளியிட்ட விளம்பரம், பெரும் விவாதப்பொருளானது.

எதிர்க்கட்சியினர் தொடங்கி ஆளும் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் சிராக் பஸ்வான் உட்படப் பலரும், இட ஒதுக்கீடு முறை பின்பற்றாமல் மேற்கொள்ளப்படும் இந்த முறைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வரிசையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது தனது எதிர்ப்பை பதிவுசெய்திருந்தார்.

UPSC | யு.பி.எஸ்.சி அலுவலகம்

இது குறித்து ஸ்டாலின் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “Lateral Entry என்பது சமூகநீதியின் மீதான நேரடித் தாக்குதல். தகுதிவாய்ந்த எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் சிறுபான்மையினருக்கான வாய்ப்புகளை இது பறிக்கிறது. இந்த நடைமுறையை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

திமுக – ஸ்டாலின்

அதோடு, எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி-களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், நாங்கள் எப்பொழுதும் எதிர்க்கும் கிரீமி லேயரை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்துகிறோம். அதுவரையில், கிரீமி லேயர் உச்ச வரம்பு தாமதமின்றி உயர்த்தப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, வரலாற்று ரீதியாக உரிமை மறுக்கப்பட்ட நமது சமூகத்தின் அனைத்து பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்க தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு மிக அவசியமானதாகும்” என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்த நிலையில், Lateral Entry நியமனம் தொடர்பான அறிவிப்பு விளம்பரத்தை ரத்து செய்யுமாறு, பிரதமர் மோடி வலியுறுத்தியதன் பேரில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், UPSC தலைவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், “மத்திய அரசின் 45 பணியிடங்களுக்கு Lateral Entry நியமன முறையில் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட விளம்பரத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு, பிரதமர் நரேந்திர மோடி DoPT (பணியாளர் மற்றும் பயிற்சி துறை)க்கு உத்தரவிட்டிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி

அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் சமூகநீதியின் கொள்கைகளுடன், குறிப்பாக இட ஒதுக்கீடு விதிகள் தொடர்பாக, Lateral Entry நுழைவு முறை சீரமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி உறுதியாக நம்புகிறார். மேலும், சமூகநீதிக்கான அரசியலமைப்பு ஆணையை நிலைநிறுத்துவது முக்கியம்.

அதன் மூலமாக விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த தகுதியானவர்கள் (Candidates) அரசாங்க சேவைகளில் தங்களுக்கு உரியப் பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.