கர்நாடகா: `உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் வங்கதேச பிரதமர் நிலைதான்..’- ஆளுநரை எச்சரித்த காங்கிரஸ் தலைவர்

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மைசூர் நகர மேம்பாட்டு ஆணையம் இழப்பீடு நிலம் ஒதுக்கியதில் மோசடி நடந்திருப்பதாக, சித்தராமையாவுக்கெதிராக எழுந்த புகாரில், வழக்கு பதிவுசெய்து விசாரிக்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இரண்டு நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். மறுபக்கம், பா.ஜ.க இந்த விவகாரத்தை முன்வைத்து சித்தராமையா பதவி விலக வேண்டும் என வலியுறுத்திவருகிறது.

சித்தராமையா – காங்கிரஸ்

அதேசமயம், இது பிற்படுத்தப்பட்ட முதல்வருக்கு எதிராக ஆளுநர் மூலம் மத்திய பா.ஜ.க அரசு செய்யும் சதி என காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. மேலும், ஆளுநருக்கெதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணி போன்றவற்றை நடத்தி வருகின்றனர். இப்படியிருக்க, ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக சித்தராமையா மனு தாக்கல் செய்யவே, ஆகஸ்ட் 29-ம் தேதி வரும் அடுத்த விசாரணை வரை முதல்வர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று விசாரணை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கர்நாடக சட்டமன்ற மேலவை உறுப்பினர் இவான் டிசோசா – காங்கிரஸ்

இந்த நிலையில், கர்நாடக சட்டமன்ற மேலவை உறுப்பினர் இவான் டிசோசா, தனது உத்தரவை ஆளுநர் திரும்பப் பெறாவிட்டால் வங்கதேச பிரதமர் நிலைதான் ஏற்படும் என எச்சரித்திருக்கிறார்.

மங்களூருவில் நடைபெற்ற பேரணியில் இதனைத் தெரிவித்த இவான் டிசோசா, “ஆளுநர் தனது உத்தரவைத் திரும்பப் பெறவில்லையென்றால் அல்லது குடியரசுத் தலைவர் அவரை திரும்பப் பெற வைக்கவில்லையென்றால், வங்கதேச பிரதமர் நாட்டை விட்டு வெளியேறியதைப்போல, கர்நாடகாவில் ஆளுநர் வெளியேற வேண்டிய நிலை வரும். அடுத்த போராட்டம் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதுதான்” என்று கூறினார்.