தென்காசி மாவட்டத்தில், ஊழல் முறைகேட்டின் பேரில், ஊராட்சி மன்றத் தலைவரை தகுதி நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட ஊர் ஆவுடையானூர். இந்த ஊராட்சி மன்றத் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த குத்தாலிங்கராஜன் பணியாற்றி வந்தார். பதவியேற்ற நாள் முதல் ஆவுடையானூர் ஊராட்சியில் பல்வேறு ஊழல் புகார்கள் முறைகேடுகள் சேர்மன் குத்தாலிங்கராஜன் மீது அடுக்கடுக்காக குவியத்தொடங்கின. ஊராட்சி மன்றத் தலைவரின் ஊழல் போக்கை சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவுன்சிலர்களும், தன்னார்வலர்களும் புகார் மனு அளித்தனர்.
அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், ஆவுடையானூர் ஊராட்சியில் முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின்பேரில், ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலை கையாளும் அதிகாரத்தினை ரத்து செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்தும் பல்வேறு பணிகளின் வாயிலாக குத்தாலிங்கராஜன் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் மற்றும் தன்னார்வலர்களின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆவுடையானூர் ஊராட்சியில் ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதால் ஊராட்சி தலைவரின் மீது மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து ஆவுடையானூர் ஊராட்சி மன்றத் தலைவர் குத்தாலிங்கராஜனை தகுதி நீக்கம் செய்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.