திருப்பத்தூர்: குப்பை மேடாக மாறிவரும் சேலம் நெடுஞ்சாலை! – விரைந்து நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

திருப்பத்தூர் மாவட்டம், ஆதிசக்தி நகர் அருகே… சேலம்‌ நெடுஞ்சாலையையொட்டி அமைந்திருக்கிறது இந்த இடம். அரூர், ஏற்காடு, சேலம் செல்வதற்காக இந்த வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெடுஞ்சாலை சில மாதங்களாகக் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது, அது மட்டுமல்லாமல் துர்நாற்றமும் வீசுகிறது.

இது குறித்து அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, “கடந்த சில மாதங்களாகத்தான் இது இப்படி இருக்கிறது. எப்படித்தான் இந்த இடத்தில் குப்பை வருகிறது என்று தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் இந்த இடத்தைச் சுத்தம் செய்தாலும், மீண்டும் குப்பையைக் கொட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் எங்களுக்குத்தான் துர்நாற்றமும், நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த இடத்தைச் சுத்தம் செய்து, இங்கு குப்பைகளைக் கொட்டுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும்” என்றனர்.

பரபரப்பான அந்தச் சாலையில், ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் முகம் சுளித்தபடியே அந்த இடத்தைக் கடந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சிலர் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது.

மறுபுறம் இருக்கும் குப்பைகளை ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் நெருப்பு மூட்டி எரிக்கின்றனர். இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, அந்தப் பகுதியில் புகை மூட்டம் உருவாவதால், வாகன ஓட்டிகள் திக்குமுக்காடுகின்றனர். எதிரே வாகனங்கள் வருவது தெரியாது என்பதால், அந்தப் பகுதியில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

இது குறித்துத் திருப்பத்தூர் துப்பரவு அலுவலக அதிகாரி முகமது இக்பாலிடம் பேசினோம். “ஆம், நாங்களும் அடிக்கடி சுத்தம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் இவ்விடத்தில் குப்பையைக் கொட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர். நாங்கள் இப்பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.