பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வரும் செப்டம்பர் 18-ம் தேதி, செப்டம்பர் 25-ம் தேதி, அக்டோபர் 1-ம் தேதி என மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அங்கு, 42.6 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்பட மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ‘அரசியல் கட்சிகளின் வேண்டுகோள்படி, தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்’ என்று உறுதியளித்திருக்கிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370 மத்திய பா.ஜ.க அரசால் அதிரடியாக நீக்கப்பட்ட பிறகு, அங்கு ‘அமைதி நிலவுகிறது, பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருக்கிறது’ என்றெல்லாம் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பா.ஜ.க தலைவர்களும் கூறிவந்தனர்.
ஆனால், ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் அதிகரித்திருக்கும் பயங்கரவாத நடவடிக்கைகள் போலீஸாருக்கும், ராணுவத்துக்கும் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கின்றன. கடந்த சில மாதங்களில் ஜம்மு பகுதியில் பல பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே பல மோதல் சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இதில், போலீஸார், ராணுவத்தினர், பொதுமக்கள் உள்பட பலர் கொல்லப்பட்டிருப்பது அந்தப் பிரதேசத்தின் மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சூழலில்தான், அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
மத்திய பா.ஜ.க அரசைப் பொறுத்தளவில், ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று பெயரளவுக்குச் சொல்லிவந்தாலும், உண்மையில் அங்கு தேர்தலை நடத்துவதில் பா.ஜ.க ஆர்வம் காட்டாமலே இருந்துவந்தது. ஆனால், பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதற்கு எதிரான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், 2024-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சட்டமன்றத் தேர்தலை நடத்திமுடிக்க வேண்டும் என்று கறார் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
ஆகவே, ஜம்மு காஷ்மீரில் செப்டம்பருக்குள் நடத்திய முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தால் இப்போது அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிவு 370 நீக்கப்பட்டதாலும், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதாலும் பா.ஜ.க மீது ஜம்மு காஷ்மீர் மக்கள் கடும் அதிருப்தியிலும், கோபத்திலும் இருக்கிறார்கள் என்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல் நோக்கர்களும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அவர்கள் கூறுவது உண்மைதான் என்பதை, கடந்த மக்களவைத் தேர்தலின்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் மூன்று மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பதிலிருந்து தெரியவந்தது.
மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெல்வோம்’ என்று சொல்லி, மூன்று தொகுதிகளில் போட்டியிடாமல் விட்டது வியப்பாகப் பார்க்கப்பட்டது. இப்போதும் காஷ்மீரில் அதே சூழல்தான் நிலவுகிறது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், ஜம்முவில் தனித்தும், காஷ்மீரில் கூட்டணி அமைத்தும் போட்டியிடப்போவதாக பா.ஜ.க-வின் ஜம்மு காஷ்மீர் தலைவர் ரவீந்தர் ரைனா கூறியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஃபரூப் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி, முன்னாள் முதல்வர் மகபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து குப்கார் கூட்டணி என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தின. அவர்கள் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்டு 110 இடங்களில் ஜெயித்தார்கள். ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அந்தக் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மக்களவைத் தேர்தலில் ஃபரூக் அப்துல்லாவின் கட்சியும், மகபூபா முஃப்தியின் கட்சியும் எதிரெதிராகப் போட்டியிட்டன.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை பா.ஜ.க-வுக்கு சாதகமாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக குப்கார் கூட்டணியில் இருந்த கட்சிகளை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் யூசுப் தாரிகாமி ஈடுபட்டிருக்கிறார். காஷ்மீர் பள்ளத்தில் மக்களின் அதிருப்தியும், ஜம்மு-வில் பயங்கரவாத நடவடிக்கைகளின் தாக்கமும் பா.ஜ.க-வுக்கு எதிராக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மறுபக்கம் காஷ்மீரில் பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா, “ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலுக்கு கட்சி முழுமையாக தயாராகிவிட்டது, வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும். ஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் பாஜக தேர்தலுக்கு முன் கூட்டணி வைக்காது.
அதே நேரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 8 முதல் 10 சுயேச்சை வேட்பாளர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விவாதங்கள் நிறைவேறினால், கூட்டாக தேர்தலில் போட்டியிடுவதற்கான வியூகம் வகுப்போம்” என்றிருக்கிறார். அதாவது பள்ளத்தாக்கில் தனக்கு ஆதரவு இல்லை எனும் நிலையில் சில சுயேட்சைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பாஜக செய்கிறது. அது பாஜகவுக்கு கைகொடுக்கும் பட்சத்தில் தேர்தலில் பாஜகவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.
எனினும் கூட்டணி அமைவது குறித்த இறுதி முடிவுகளின் அடிப்படையிலே உண்மை நிலவரம் தெரிய வரும் என்கிறார்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88