`வெட்ட வெளிச்சமான திமுக, பாஜக ரகசிய உறவு..!’ – அதிமுக குற்றச்சாட்டுக்கு திமுக ரியாக்‌ஷன் என்ன?!

அதிமுக-வின் குற்றச்சாட்டு!

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கிறது என்று அறிவித்தார்கள். ஆனால், அந்த விருந்தில் அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுடன் விருந்தில் பங்கேற்றார். கருணாநிதியின் உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா 18-ம் தேதி நடைபெறுகிறது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. ஆனால், அந்த விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிறார்.

ஜெயக்குமார்

இந்தக் காரணத்துக்காகவே முதலில் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாகச் சொல்லிவிட்டு, அடுத்ததாக விருந்தில் பங்கேற்றிருக்கிறார்கள். ஸ்டாலின் வேறு, திமுக வேறு… ஏன் எட்டு அமைச்சர்கள் விருந்தில் கலந்துகொண்டார்கள்… ஜே.பி.நட்டா, திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து வைக்கிறார். முதல்வர் வெளிநாட்டுக்குச் செல்லும் நேரத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்ற பயத்தில்தான் தேநீர் விருந்துக்குச் செல்வது, மத்திய அமைச்சரை அழைப்பது என்று பாஜக-வுக்கு கூஜா தூக்கும் அரசாக திமுக இருக்கிறது. இதன் மூலமாக திமுக – பாஜக இடையே ரகசியக் கள்ள உறவு இருப்பது நிரூபணமாகிறது” என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

`நாடகமாடிக்கொண்டிருக்கிறது திமுக!’

இந்த விவகாரம் குறித்து அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பேசினோம். “தங்களுக்குத் தகுந்தாற்போல பேசுவதில் திமுக-வினருக்கு நிகர் யாருமே இல்லை. தேவையில்லையென்றால், `ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்கு கவர்னர்’ போன்ற வசனங்களைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். தேவையென்றால், அதே திமுக-வினர் வேறு மாதிரி பேசுவார்கள். சென்ற வருடமும் அதே சுதந்திர தினம், அதே தேநீர் விருந்து, அதே ராஜ் பவன், அதே கவர்னர்தான். ஆனால், எதிராகச் செயல்படுகிறார்கள் என்று சொல்லி தேநீர் விருந்தைப் புறக்கணித்தது திமுக. ஆனால், இந்த வருடம் அரசியல் நாகரிகம் அது இதுவென்று சொல்லி அமைச்சர்கள்கூட இல்லை… முதல்வரே நேரடியாகச் சென்று வந்திருக்கிறார். அப்போது, சென்ற வருடம் நாகரிகம் இல்லாமல் நடந்துகொண்டது என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார்களா… நாடகமாடி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது திமுக.

பாபு முருகவேல்

இறந்தவர்களைக் குறித்து விமர்சனம் செய்வது சரியில்லை. இருந்தபோதிலும், கருணாநிதிக்கு என்று மோசமான வரலாறுகளும் உண்டு. அதை மறைக்க இது போன்ற செயல்களை திமுக-வினர் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு மகனாகத் தன் தந்தைக்கு நாணயம் வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஒரு மாநிலத்தின் முதல்வராக இப்படிச் செய்வது ஏற்புடையதில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது கறுப்பு பலூன் தொடங்கி எல்லாம் பறந்தன. இப்போது ஆளுங்கட்சியாக ஒரு குடையைக்கூட வெள்ளையில் பிடிக்கும் திமுக-வின் மறைமுக உறவு இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது. திமுக, ஒரு மோசமான ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் தப்பித்துக்கொள்ள பாஜக அரசுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டிருக்கிறது திமுக. அதனால்தான் இப்போது திமுக மத்திய அரசைக் கண்டித்துப் பேசுவதுகூட இல்லை” என்றார்.

`தி.மு.க., பா.ஜ.க ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது!’

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “ `ஆளுநர் தேநீர் விருந்தில் அரசாங்கம் கலந்துகொள்ளும். ஆனால் தி.மு.க கலந்துகொள்ளாது’ என்று வேடிக்கையான விளக்கத்தைக் கொடுக்கின்றனர். தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் தலைவர். அந்தக் கட்சிக்கு துரைமுருகன்தான் பொதுச்செயலாளராக இருக்கிறார்.

அந்த இரண்டு பேருமே ஆளுநர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தி.மு.க கலந்துகொள்ளாது என இரட்டை வேடம் போடுகின்றனர். அ.தி.மு.க ஆட்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்விதமாக நாங்களும் நாணயம் வெளியிட்டோம். அப்போது பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருந்தும், அவர்களை அழைக்கவில்லை.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதும், நாணயம் வெளியிடுவதும் அவர்களின் விருப்பம். அதேநேரத்தில் அதை யார் வெளியிடுவது என்பதுதான் கேள்வி. ராகுல் காந்தியை அழைத்து ஏன் வெளியிடவில்லை… இதிலிருந்து தி.மு.க., பா.ஜ.க ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது” என்றார்

“என்ன பிரச்னை எடப்பாடி பழனிசாமிக்கு?”

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான ஆ.ராசா, “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங் ஏன் வருகிறார்… ராகுல் காந்தியை ஏன் எதற்கும் அழைப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசுதான் என்பதால், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்னை எடப்பாடி பழனிசாமிக்கு?

ஆ.ராசா

கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் இருக்கும் நாணயங்கள் எதுவாக இருந்தாலும், அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். அ.திமு.க-வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும், அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும்கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை… முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்காக வெளியிடப்பட்டிருக்கும் நாணயத்தில்தான் ‘தமிழ் வெல்லும்‘ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது எனப் புரியவில்லை.” என காட்டமாக பதிலளித்திருக்கிறார்,

`நாங்கள் அதிமுக-போல அடிமையில்லை!’

அதிமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து திமுக-வின் செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் எஸ்.ஏ.எஸ்.ஹபீசுல்லாவிடம் பேசினோம். “ஆட்சி போய்விடுமோ, கைதாகிவிடுவோமோ என்ற அச்சத்தில் ஒன்றிய பாஜக அரசு சொன்ன எல்லாவற்றையும் கையைக் கட்டி, வாயை மூடித் தலையை ஆட்டியது அதிமுக அரசு. இவர்களுக்கு திமுக குறித்துப் பேசுவதற்கு அருகதையே இல்லை. எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, ஆளுங்கட்சியாகவும் ஒன்றிய பாஜக அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பது திமுக மட்டுமே. அதேசமயத்தில் ஓர் ஆளும் அரசாக என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்துகொண்டிருக்கிறோம். அதற்காக, பாசிச பாஜக அரசு கண்டிப்பதிலிருந்து திமுக தவறியதே இல்லை. நிதிப் பகிர்வில் வஞ்சனை செய்கிறது என்று பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தைப் புறக்கணித்தோம். தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினோம். நாடாளுமன்றத்தில் எங்கள் உறுப்பினர்கள் பாஜக-வுக்குக் கண்டனத்தைப் பதிவுசெய்தார்கள்.

எஸ்.ஏ.எஸ்.ஹபீசுல்லா

மக்களுக்கு விரோதமாக எந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் அதை எதிர்த்து பேச திமுக தயங்கியதே இல்லை. ஆனால், கூட்டணியில் இருக்கும்போது, அதிமுக தலைவர்கள் குறித்து அபத்தமாகப் பேசியபோதுகூட பாஜகவைக் கண்டிக்கவில்லை. இப்போது பாஜக கூட்டணியைவிட்டு வெளியே வந்துவிட்டது அதிமுக. இன்னும்கூட ஒன்றிய பாஜக அரசின் அக்கிரமத்தைக் கண்டிக்க வக்கில்லாதவர்கள் எங்களைப் பார்த்துப் பேசுவது நகைப்புக்குரியது. ஊழலற்ற ஆட்சிசெய்யும் திராவிட மாடல் அரசுக்கு யாரைப் பார்த்தும் பயம் இல்லை. திமுக., பாஜக-வை எதிர்க்கிறது. அதேசமயத்தில் அதிமுக-போல அடிமைச் சேவகம் செய்யாமல், ஓர் ஆளும் அரசாகச் செய்யவேண்டியதைச் செய்து கொண்டிருக்கிறோம். அதிமுக-வில் இப்போது உட்கட்சிப்பூசல் மோசமடைந்துவருகிறது. அதை மடைமாற்ற இப்படி இல்லாத குற்றச்சாட்டுகளையெல்லாம் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் அதிமுக-வினர். பாசிச பாஜக-வுடன் எந்தக் காலத்திலும் திமுக சமரசம் செய்துகொள்ளாது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை வைத்திருக்கும் இதே அதிமுக, அடுத்த தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும். அப்போது பாஜக-வுடன் கள்ளக் கூட்டணியில் இருப்பது அதிமுக என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88