`பாஜக-வுடன் ரகசிய உறவு… இரட்டை வேடம்’ – திமுக மீது பாயும் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசியவர், “ `ஆளுநர் தேநீர் விருந்தில் அரசாங்கம் கலந்துகொள்ளும். ஆனால் தி.மு.க கலந்து கொள்ளாது.’ என்று வேடிக்கையான விளக்கத்தைக் கொடுக்கின்றனர். தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் தலைவர். அந்தக் கட்சிக்கு துரைமுருகன்தான் பொதுச்செயலாளராக இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

அந்த இரண்டு பேருமே ஆளுநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தி.மு.க கலந்துகொள்ளாது என இரட்டை வேடம் போடுகின்றனர். அ.தி.மு.க ஆட்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக நாங்களும் நாணயம் வெளியிட்டோம். அப்போது பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருந்தும், அவர்களை அழைக்கவில்லை.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதும், நாணயம் வெளியிடுவதும் அவர்களின் விருப்பம். அதேநேரத்தில் அதை யார் வெளியிடுவது என்பதுதான் கேள்வி. ராகுல் காந்தியை அழைத்து ஏன் வெளியிடவில்லை. இதிலிருந்து தி.மு.க, பா.ஜ.க ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தி.மு.க மற்றும் கூட்டணியின் 39 எம்.பி-க்களை மக்கள் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆளுநர் மாளிகை | தேநீர் விருந்து

கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மாநிலத்துக்கு சாதகமாக குரல் எழுப்புகிறார்கள். தி.மு.க-வுக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் தமிழ்நாட்டை பற்றி எப்போதும் கவலை இல்லை. அ.தி.மு.க ஆட்சியிலேயே முல்லைப்பெரியாறு அணை எந்தளவுக்கு பலமாக உள்ளது என்பதை உறுதி செய்துவிட்டோம்.

அணைக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு அந்த மாநில அரசும், எம்.பி-க்களும் எதையாவது கூறிக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மை இல்லை. முல்லைப்பெரியாறு அணை, தென் மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீருக்கு ஆதரமாக இருக்கிறது. தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தனித்தன்மை இல்லை.

முல்லைப்பெரியாறு

அவர்கள் தி.மு.க கட்சியில் இணைந்துவிட்டனர். அங்கு மக்களின் பிரச்னைக்கு யார் குரல் கொடுக்கிறார்கள். விலைவாசி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட எந்த பிரச்னை பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. பதவி அதிகாரத்துக்காக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.” என்றார்.