கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிந்து. இவரின் தாய் காந்திபுரம் பகுதியில் வசித்து வருகிறார். சிந்து தன் தாயைப் பார்ப்பதற்காக அவ்வப்போது காந்திபுரம் வருவது வழக்கம்.
அப்படி கடந்த சில நாள்களுக்கு முன்பு சிந்து தன் தாயைச் சந்தித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஒரு முதியவர் தன் நாயுடன் வாக்கிங் வந்துள்ளார்.
திடீரென்று அந்த நாய் சிந்துவைக் கடிக்கத் தொடங்கியது. நாய் பயங்கரமாக கடித்ததில் சிந்துவின் கைப்பகுதியில் பலத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற சிந்து,
நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மருத்துவமனையில் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டார். இந்தச் சம்பவம் சிந்து குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
நாய் கடித்து சிந்துவின் கை பலத்தக் காயமடைந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவியது. இந்தச் சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக சிந்து, ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் போலீஸார் நாயின் உரிமையாளர் ஐசக் பாபு என்பவர்மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.