எஸ்.பி.ஐ., பி.என்.ஐ ஆகிய இரண்டு வங்கிகளிலும் கர்நாடகா அரசின் பல்வேறு துறைகளும், மாநில பொதுத்துறை நிறுவனங்களும் கணக்குகளை வைத்திருக்கின்றன.
இந்த நிலையில், இந்த இரு வங்கிகளிலும் இருந்த மாநில அரசின் நிதி முறைகேடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வங்கிகளுடனான கணக்குகளை மூடுமாறு மாநில அரசின் துறைகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் கர்நாடகா அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக, கர்நாடகா நிதித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு, முதல்வர் சித்தராமையா ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.
இந்த வங்கிகளில் வைத்திருக்கும் கணக்குகளை உடனடியாக மூடிவிட்டு, டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று மாநில அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள், கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு நிதித்துறை உத்தரவிட்டது.
மேலும், நிதி முறைகேடு காரணமாக இந்த வங்கிகளில் இனிமேல் முதலீடு எதுவும் செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் நிதித்துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இரு வங்கிகளிலும் கர்நாடகா அரசின் நிதி முறைகேடு செய்யப்பட்டிருக்கிறது என்பது அரசின் கவனத்துக்கு வந்தவுடன், அரசு சுற்றிக்கை ஒன்றை வெளியிடப்பட்டது. அதில், ‘பஞ்சாப் நேஷனல் வங்கியில் கர்நாடகா தொழிற்பகுதி வளர்ச்சி வாரியம் செலுத்திய ரூ.12 கோடி, வங்கி அதிகாரிகளின் முறைகேடு காரணமாக திருப்பி வழங்கப்படவில்லை. அந்தத் தொகையைப் பெறுவதற்காக வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அது பலனளிக்கவில்லை. ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது.
அதேபோல, எஸ்.பி.ஐ வங்கியில் கர்நாடகா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செலுத்திய ரூ.10 கோடி, வங்கி அதிகாரிகளின் முறைகேடு காரணமாக திருப்பித் தரப்படவில்லை. ஆகவே, இந்த இரு வங்கிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் வைப்புத்தொகைகள், முதலீடுகள் ஆகியவற்றை கர்நாடகா அரசின் துறைகள், வாரியங்கள், கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழககங்கள் ஆகியவை திரும்பப்பெற வேண்டும். எதிர்காலத்தில் இந்த இரு வங்கிகளிலும் முதலீடோ, வைப்புத்தொகையோ செலுத்தப்படக்கூடாது. மேலும், அந்த வங்கிகளுடனான கணக்குகளை மூட வேண்டும்’ என்று என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2013-ம் ஆண்டு கர்நாடகா மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் எஸ்.பி.ஐ-யில் வைப்பத்தொகையாக ரூ.10 கோடி வைத்திருந்ததை, ஒரு தனியார் கம்பெனியின் கடன்களை அடைப்பதற்கு போலி ஆவணங்கள் மூலமாக எஸ்.பி.ஐ தவறாகப் பயன்படுத்தியிருக்கிறது என்பது கர்நாடகா அரசின் குற்றச்சாட்டு.
அதேபோல, கர்நாடகா தொழிற்பகுதி வளர்ச்சி வாரியம் பி.என்.பி-யில் 2011-ம் ஆண்டு ரூ.25 கோடி வைப்புத்தொகை வைத்திருந்தது. அந்த நிதியை வங்கி அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாநில அரசின் அதிகாரிகள், அந்த ரூ-25 கோடியில் ரூ.13 கோடியைத் திரும்பப் பெற்றுவிட்டார்கள். மீதித்தொகை அரசுக்கு கிடைக்கவில்லை.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும், பல கோடி ரூபாய் இன்னும் இந்த வங்கிகளிடமிருந்து பெற வேண்டியிருக்கிறது என்றும் கர்நாடகா அரசு கூறியிருக்கிறது. ஏற்கெனவே, பழங்குடி மக்களுக்கான கர்நாடகா மகரிஷி வால்மீகி வளர்ச்சிக் கழகத்தில் பழங்குடியினருக்கான நிதி முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்று சித்தராமையா அரசு மீது பா.ஜ.க குற்றம்சாட்டிவருகிறது. இந்த நிலையில், எஸ்.பி.ஐ., பி.என்.பி விவகாரம் கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து கர்நாடகா மாநில அரசுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுவருவதாக பி.என்.பி., எஸ்.பி.ஐ ஆகிய இரு வங்கிகளும் தெரிவித்தன. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இந்த விவகாரம் குறித்து பேச முடியாது என்று பி.என்.பி., எஸ்.பி.ஐ அதிகாரிகள் கூறுகிறார்கள். செப்டம்பர் மாதத்துக்குள் இந்த வங்ககிளுடனான கணக்குகள் அனைத்தையும் முடிக்குமாறு மாநில அரசின் துறைகள், வாரியங்கள் உள்பட அனைத்து அமைப்புகளுக்கும் கர்நாடகா அரசு உத்தரவிட்டிருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88