`ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை; முதல்வராகவே நீடிப்பார்’ – சித்தராமையா குறித்து டி.கே.சிவக்குமார்

கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது நிலமோசடி புகாரில் வழக்கு தொடர மாநில ஆளுநர் ஒப்புதலளித்த சம்பவம் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, சித்தராமையாவின் மனைவிக்கு மைசூர் நகர மேம்பாட்டு ஆணையம் முறைகேடாக வீட்டுமனை ஒதுக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், சித்தராமையா பதவி விலக வேண்டும் என பா.ஜ.க-வினர் வலியுறுத்திவந்தனர்.

சித்தராமையா

பின்னர் இதில் விளக்கமளித்த சித்தராமையா, தன்னுடைய மனைவிக்குச் சொந்தமான நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிட்டதற்கு இழப்பீடாக வழங்கப்பட்டவை அது என்றார். இருப்பினும், இழப்பீடாக கொடுக்கப்பட்ட நிலத்தின் சொத்து மதிப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தின் மதிப்பை விட பல மடங்கு அதிகமானது என்று கூறப்பட்டது. இவ்வாறிருக்க, சமூக ஆர்வலர்கள் பிரதீப் குமார், ஆபிரகாம், கிருஷ்ணா ஆகியோர் நிலமோசடி விவகாரத்தில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் புகார் கொடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீது வழக்கு தொடர தற்போது அனுமதித்திருக்கிறார்.

இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ், இதனை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதல்வருக்கு எதிரான சதி என்றது. இருப்பினும், ஆளுநர் அரசியலமைப்பு அதிகாரங்களுக்கு உட்பட்டுதான் செயல்படுகிறார் என பா.ஜ.க கூறிவருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் இன்று பேசிய மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “வழக்கு தொடர அனுமதித்தது சட்டத்துக்கு எதிரானது. என்னுடைய முதல்வர் எந்தவொரு அழுத்தத்துக்குள்ளும் வரமாட்டார். இங்கு ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. முதல்வர் பதவியில் அவரே நீடிப்பார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

இந்த விவகாரத்தை நாங்கள் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்துப் போராடுவோம். இது, ஆட்சியிலிருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான சதி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை” என்று கூறினார்.

அதேபோல் அமைச்சர் பிரியங்க் கார்கே, “ஆளுநர் மாளிகை, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை குறைமதிப்பிற்குட்படுத்தும் ஒரு கருவியாக பா.ஜ.க-வால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88