குழந்தைகள் எழுதிய கடிதங்கள், மதுப்பழக்கத்தை கைவிட்ட அப்பாக்கள்… இது மணப்பாறை நெகிழ்ச்சி!

பள்ளி மாணவர்களான தங்கள் பிள்ளைகள் எழுதிய கடிதத்தைப் படித்து மனம் திருந்தி மதுப்பழக்கத்தில் இருந்து மீண்ட அப்பாக்களை, சுதந்திர தின நிகழ்ச்சிக்குப் பள்ளிக்கு அழைத்து கௌரவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள இந்தப் பள்ளியில் மிகவும் ஏழ்மை நிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே பெரும்பாலும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் தங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என தங்களுக்கு விருப்பமானவர்களுக்குக் கடிதம் எழுதினர். அதை அஞ்சலகம் மூலம், அவர்கள் யாருக்கு எழுதி இருந்தார்களோ அவரவர்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தனர் பள்ளி தரப்பினர்.

அதில், பெரும்பாலான மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் உள்ள கெட்ட பழக்கவழக்கங்களைச் சுட்டிக்காட்டி, அவற்றால் தங்கள் எவ்வளவு மன வேதனை அடைந்திருக்கிறோம் எனவும், ஆகவே இந்தக் கடிதத்தின் மூலம் உடனடியாக அவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் தங்கள் ஆழ்மனதின் வலியை வரிகளாக எழுதி இருந்தனர்.

மனம் திருந்திய பெற்றோர்

இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்றதும் அதனை படித்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் எவ்வளவு மன வேதனையோடு உள்ளனர் என்பதை புரிந்து கொண்டனர். இதில், 15 பேர் அப்பாக்கள் பள்ளிக்கு வந்து, தங்களிடம் பல ஆண்டுக்காலமாக இருந்த குடிப்பழக்கத்தை உடனடியாகக் கைவிடுவதாகவும், சிலர், புகையிலை உள்ளிட்ட தீய பழக்கங்களை கைவிடுவதாகவும் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கூறினர். இதையடுத்து, சமுத்திரம் அரசு பள்ளியின் சார்பில் 15 மாணவ, மாணவிகளின் அந்த அப்பாக்கள், சுதந்திர தினமான நேற்று பள்ளிக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அதற்கு முன்னதாக, பள்ளிக்கு வருகை தந்த பெற்றோர்களை பள்ளி வளாகத்திற்கு வெளியில் இருந்து பறை இசை முழங்க வரவேற்று பள்ளிக்கு அழைத்து வந்தனர். அப்போது, மாணவர்கள் வரிசையாக நின்று, மனம் திருந்திய தங்கள் பெற்றோர்களை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, தேசியக்கொடி ஏற்றிய பின், அந்த அப்பாக்களுக்குப் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

அப்போது, ’போதைப் பழக்கத்தை 15.08.2024 முதல் கைவிடுகிறேன். இனிவரும் காலங்களில் இதனை பயன்படுத்த மாட்டேன், மற்றவர்களையும் இப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க என்னால் ஆன முயற்சியை மேற்கொள்வேன்’ என தங்கள் குழந்தைகளுக்கு உறுதிமொழி அளிக்கும் வகையில், பள்ளியின் சார்பில் தயாரிக்கப்பட்ட ’தந்தையின் உறுதிமொழி’ என்ற சான்றிதழில் பெற்றோர்கள் கையெழுத்திட்டு தங்களது குழந்தைகளுக்குக் கொடுத்தனர்.

மனம் திருந்திய பெற்றோர்கள்

அப்போது, மாணவர்கள் கரவொலி எழுப்பிய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் வெகுவாகக் கவர்ந்தது. தங்கள் பெற்றோருக்கு மகிழ்ச்சி தெரிவித்து, குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதற்கு நன்றி தெரிவித்தனர் மாணவர்கள். தங்களது அப்பாக்கள் கொடுத்த உறுதிமொழி சான்றிதழை மாணவர்கள் அவரவர் வீட்டின் சுவரில் மாட்டி வைக்கும்போது, அதனை பார்க்கும் அப்பாக்கள் மீண்டும் போதைப் பழக்கங்களுக்குச் செல்லமாட்டார்கள் என்பது ஆசிரியர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அப்பாக்கள், பள்ளிக்கு நன்றி தெரிவித்தனர். சுதந்திர தின நாளில் அரசு பள்ளியின் நடைபெற்ற இந்த நிகழ்வு, அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.