தூத்துக்குடி: `கோரிக்கையை நிறைவேற்றவில்லை’ – தனியாக ‘மக்கள் கிராமசபை கூட்டம்’ நடத்திய மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி. இதில் நான்கு கிராமங்களும், ஒன்பது வார்டுகளும் உள்ளன. அவற்றில் பொட்டலூரணி கிராமத்தில் மட்டும் நான்கு வார்டுகள் உள்ளன. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் அதிக வார்டுகளையும் அதிக மக்கள் தொகையையும் கொண்ட பொட்டலூரணி கிராமத்தில் 2 கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மக்கள் கிராமசபை கூட்டம்

எனவே, ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நடைபெறும் கிராமசபை கூட்டத்தை தங்கள் ஊரில் நடத்த வேண்டும் என பொட்டலூரணி கிராம மக்கள், கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பொட்டலூரணி ஊர் மக்கள், கடந்த ஜூலை 15-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர். ஆனால்,  எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கான கிராமசபை கூட்டம் செட்டிமல்லன்பட்டி கிராமத்தில் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொட்டலூரணி கிராம மக்கள் ஒன்று திரண்டு அவர்கள் ஊரிலேயே ‘மக்கள் கிராமசபை’ என்ற பெயரில் தனியாக கிராமசபை கூட்டத்தை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் ஜெயலெட்சுமி, 4-வது வார்டு உறுப்பினர் சுபா, 5-வது வார்டு உறுப்பினர் ஆதிலட்சுமி, 6-வது வார்டு உறுப்பினர் சத்தியா நாராயணலட்சுமி மற்றும்  7-வது வார்டு உறுப்பினர் பூமாரியம்மா மற்றும் கிராம மக்கள் என, 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பொட்டலூரணி கிராமத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கழிவுமீன் ஆலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மக்கள் கிராமசபை கூட்டம்

ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொட்டலூரணி கிராம மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது பொட்டலூரணி மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளரை பணியிட மாறுதல் செய்ய வேண்டும். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில் இருந்து பொட்டலூரணியை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் ஆகிய 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.