‘முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வகித்து வரும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை டாக்டர் சரவணன் குறி வைக்கிறார்’ என்றும், ‘இல்லையில்லை, மதுரை மாவட்டத்தில் 3 மாவட்ட செயலாளர்கள் இருந்து வரும் நிலையில், அதை மாற்றி 2 தொகுதிக்கு ஒரு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற கணக்கில் சரவணனையும் மாவட்ட செயலாளராக நியமிக்கப் போகிறார்கள்’ என்றும் அ.தி.மு.க-வினர் மாறி மாறி பேசி வருவதால் பரபரத்து கிடக்கிறது மதுரை மாநகர அ.தி.மு.க!
அ.தி.மு.க செயற்குழு இன்று கூடியுள்ள நிலையில், அதில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் அல்லது அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிப்பு குறித்து அறிவிக்கப்படலாம் என்று பேசப்படும் நிலையில் மதுரை மாநகர அ.தி.மு.க விவகாரம் அதிகமாக பேசப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல், மாநகராட்சித் தேர்தலின்போது கட்சியினர் வெற்றிக்காக செல்லூர் ராஜூ பாடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க மூன்றாமிடம் வரக்காரணமாக இருந்தார், அது மட்டுமின்றி தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ள ராகுலை புகழ்கிறார், விஜய் அரசியலுக்கு வருவது நல்லது என்கிறார் என்று கட்சியினர் பரவலாக புகார் எழுப்ப, எடப்பாடி பழனிசாமியும் செல்லூர் ராஜூவை வார்ன் செய்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான் ‘டாக்டர் சரவணன் தன் செல்வாக்கை பயன்படுத்தி மாநகர அ.தி.மு.க நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வருகிறார். கட்சி நிகழ்வுகளில் தன்னை தனித்து காட்டிக் கொள்கிறார். அறிக்கையெல்லாம் விட்டு தன் பவரை காட்டுகிறார், அதனால் மாநகர செயலாளரை மாற்றப் போவது உறுதி. அதே நேரம் சரவணனை எப்படி ஆஃப் செய்வது என்றும் செல்லூர் ராஜூவும் யோசித்து வருகிறார்’ என்று கட்சியினர் பேசி வருகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர்கள், “பெரிய பெரிய ஜாம்பவான்கள் மாவட்ட செயலாளராக இருந்த மதுரையில், வட்டச்செயலாளராக தன் அரசியல் பயணத்தை தொடங்கி மாநகராட்சி கவுன்சிலராகி, 2011-ல் எம்.எல்.ஏ-வான செல்லூர் ராஜூ அப்படியே அமைச்சராகவும் உயர்ந்தார். அதோடு மாநகரச் செயலாளர் பதவியும் கிடைக்கு தனக்கு போட்டியாக யாரையும் வர விடாமல் பார்த்துக்கொண்ட செல்லூர் ராஜூ, கட்சியில் சீனியர்களான ராஜன் செல்லப்பா, சாலைமுத்து, ஏ.கே.போஸ், ராஜாங்கம், எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டவர்கள் முக்கியத்துவம் பெறாத வகையில் பார்த்துக்கொண்டார். 2016-க்குப்பின் மதுரை மாவட்ட அரசியலுக்குள் நுழைந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் மல்லுக்கட்டினார். 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் கோஷ்டி அரசியலை ஓரங்கட்டி அமைதியானார்.
இந்த நிலையில்தான் அமைச்சர் பி.டி.ஆருடன் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு பாஜகவிலிருந்து விலகிய டாக்டர் சரவணன் அ.தி.மு.க-வில் சேர முயன்றபோது, தனக்கு போட்டியாக வருவார் என நினைத்த செல்லூர் ராஜூ கட்சியில் சேர்க்க ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், ஆர்.பி.உதயகுமார் மூலம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் இணைந்தார் டாக்டர் சரவணன். அதே நேரம் செல்லூர் ராஜூவின் ஆதரவு இல்லாமல் மாநகர கழகத்தில் செயல்பட முடியாது என்பதால் ஒருவழியாக செல்லூராரை சந்தித்து மரியாதை செய்தார் டாக்டர் சரவணன். நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் போட்டியிட யாரும் முன்வராதபோது டாக்டர் சரவணன் துணிச்சலாக முன் வந்தது எடப்பாடி பழனிசாமிக்கு பிடித்து போனது.
இந்த நிலையில்தான், “தேர்தலில் செல்லூர் ராஜூ முழுமையாக வேலை செய்யவில்லை, தேர்தலில் டாக்டர் சரவணன் நிறைய செலவு செய்துள்ளார். கட்சியை சுறுசுறுப்பாக அவரை மாவட்ட செயலாளாராக்குங்கள். தென் மாவட்ட அ.தி.மு.க-வில் மாவட்ட செயலாளர்களில் அகமுடையாருக்கு பிரதிநிதித்துவம் இல்லை’ என்று அ.தி.மு.க-வில் ஒரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
என்னதான் இருந்தாலும் செல்லூர் ராஜூ சீனியர், மக்கள் அனைவருக்கும் அறிமுகமானவர், அதனால் யாருக்கும் பிரச்னை இல்லாமல் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்கலாமா என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாகவும் அப்படி அமைத்தால் டாக்டர் சரவணனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், அதை மற்ற மாவட்ட செயலாளர்கள் ஏற்றிக்கொள்வார்களா?” என்கிறார்கள்.
அதே நேரம், டாக்டர் சரவணனை கட்சி நிர்வாகிகள் தேடிச்செல்வதும், கட்சி நிகழ்வுகளுக்கு வரும்போது அவருடன் ஒரு கூட்டம் வருவதும், தி.மு.க அரசுக்கு எதிராக அறிக்கை விட்டு தனித்துக்காட்டிக்கொள்வதும் தொடர்கிறது.
“செல்லூர் ராஜூவை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று எடப்பாடியிடம் சிலர் மனு அளித்த விவகாரத்திலும், கட்சிக்காரரை ஆபாசமாக செல்லூர் ராஜூ பேசியதாக சொல்லப்பட்ட ஆடியோ வெளியானதன் பின்னணியிலும் டாக்டர் சரவணனின் பங்கு உள்ளது” என்கிறார்கள் செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்கள்.
இதுகுறித்து டாக்டர் சரவணனிடம் கேட்டோம், “அவர் கட்சியின் சீனியர், மாநகரச் செயலாளரான அவருக்கு கீழ்தான் பணியாற்றி வருகிறேன். 2026-ல் எடப்பாடியாரை முதலமைச்சாராக்க வேண்டும் என்பதற்காக எல்லோரும் இணைந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். தேர்தல் தோல்வி என்பது மதுரையில் மட்டுமல்ல, தமிழகம் முழுக்க ஏற்பட்டுள்ளது. இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. அ.தி.மு.க-வுக்கு விழும் வாக்குகள் தி.மு.க-வுக்கோ, பா.ஜ.க-வுக்கோ மாறிப்போக வாய்ப்பில்லை. இரண்டு கட்சிகளும் சேர்ந்து கோல்மால் பண்ணியிருப்பார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. அ.தி.மு.க தொண்டர்கள் மனதில் பட்டதை பேசலாம், எந்த பிரச்னையிலும் நான் யாரையும் தூண்டிவிடுவதில்லை. அதுபோல, மருத்துவத்துறை உள்ளிட்ட மாநிலம் அளவிலான முக்கிய பிரச்சனைகள், நிதி ஆயோக்கில் முதலமைச்சர் கலந்துகொள்ளாதது குறித்துதான் அறிக்கை விடுகிறேன். மற்றப்படி மாநகர செயலாளருக்கு எதிராக எந்த அரசியலும் செய்யவில்லை. சிலபேர் அப்படி வதந்தியை கிளப்பி விடுகிறார்கள்” என்றார்.
இந்த சர்ச்சைகள் குறித்து செல்லூர் ராஜூவிடம் பேசினோம், “மதுரை மாநகர் கழகத்தில் அப்படி எந்த பிரச்னையுமில்லை. எல்லோரும் அ.தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்த வேலை செய்து கொண்டிருக்கிறோம். கட்சி நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிப்பது பற்றி தலைமைதான் முடிவு செய்வார்கள், அதுகுறித்து நான் கூற முடியாது. மருத்துவ அணியில் மாநில பொறுப்பில் இருப்பதால் டாக்டர் சரவணன் அறிக்கை விடுகிறார். அதனால் எந்த பிரச்னையுமில்லை, அ.தி.மு.க-வில் யார் வேண்டுமானாலும் அறிக்கை விடலாம், தடையில்லை. மற்றபடி கட்சியில் கருத்து வேறுபாடுகளோ கோஷ்டிகளோ இல்லை. இணைந்து செயல்படுகிறோம்” என்றார்.
இருவரும் இப்படி பேசினாலும், மாவட்ட நிர்வாகிகளும், தீவிரமான தொண்டர்களும் ‘இருவருக்குமிடையே மறைமுக யுத்தம் நடந்துகொண்டிருக்கறது, விரைவில் இதற்கான விடை தெரியும்” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88