இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ச்சியாக 11-வது ஆண்டாக நேற்று செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, “பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை. அப்போதுதான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைப் பற்றி நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இதற்கு எதிராக நாட்டு மக்களிடம் கடும் சீற்றம் இருக்கிறது. இந்தக் கொடூரமான செயல்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார். மேலும், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் கனவென்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் மோடி தெரிவித்தார்.
இவ்வாறிருக்க, செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மக்களவை ஏதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பின்வரிசையில் அமரவைத்த நிகழ்வு காங்கிரஸ் தரப்பிலிருந்து விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. குறிப்பாக, முன்வரிசையில் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா, ஜெய்சங்கர் ஆகியோர் அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் அடுத்த மூன்று வரிசை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, ஐந்தாவது வரிசையில் ராகுல் காந்தி அமரவைக்கப்பட்டிருந்தார்.
இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரம், “இந்த ஆண்டு, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களைக் கவுரவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்குப் பின்னால் சில மத்திய அமைச்சர்களும் அமர்ந்திருந்தனர்” என்று விளக்கமளித்தது.
இருப்பினும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “ஜூன் 4-ம் தேதிக்கு பிறகான புதிய எதார்த்தத்தை மோடி புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கடைசி வரிசைக்கு தள்ளிய உங்களின் திமிர், நீங்கள் இன்னும் எந்தப் பாடமும் கற்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் மரியாதைக்கு தகுதியானவர்கள் என்றாலும், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் போன்ற கேபினட் அமைச்சர்கள் எப்படி முன்வரிசை இருக்கைகளைப் பெறுகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நெறிமுறையின்படி, இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களும் முன் வரிசையில் இருக்க வேண்டும். ஆனால், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இருக்கைகள் 5-வது வரிசையில் இருந்தது. இது எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பு மட்டுமல்ல, இந்திய மக்களுக்குமான அவமானம்” என்று ட்வீட் செய்திருந்தார்.
மேலும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட், “ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களைக் கவுரவிக்க இவ்வாறு செய்யப்பட்டது என்ற முட்டாள்தனமான அறிக்கை பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து வந்திருக்கிறது. வினேஷ் போகத் உட்பட அவர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட வேண்டும்தான். ஆனால், அமித் ஷா, ஜே.பி.நட்டா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் அவர்களுக்கு மரியாதை விரும்பவில்லையா?” என்று கேள்வியெழுப்பினார்.
அதேபோல், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “கடந்த 2014-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவர்களான அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. ஆனால், மோடி ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறார் ராஜ்நாத் சிங்?” என்று ட்வீட் மூலம் விமர்சித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88