40 ஆண்டுகளாகத் தலைமறைவு வாழ்க்கை; பாலியல் வன்கொடுமை வழக்கில் 70 வயது முதியவரை விடுவித்த கோர்ட்!

நீதி சில நேரங்களில் தாமதமாகத்தான் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் சில வழக்குகள் பல சகாப்தங்களைத் தாண்டி நடந்து கொண்டிருக்கும். அது போன்ற ஒரு வழக்கில் 40 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த ரபீக் ஷேக் (70) கடந்த 1986-ம் ஆண்டு தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 15 வயது பெண்ணை கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இது தொடர்பாக அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்தது.

ரபீக் ஷேக் தொடர்ந்து கடந்த 40 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தார். ரபீக் ஷேக் 15 வயது பெண்ணை தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்திற்கு கடத்திச் சென்று அவரையே திருமணம் செய்துகொண்டு, ஆக்ராவில் வசித்து வந்தார். அவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றன. ரபீக் ஷேக்கின் மனைவி இறந்துபோனார். அதோடு ரபீக் ஷேக் மீது புகார் கொடுத்த பெண்ணும் உயிரோடு இல்லை. இந்நிலையில் ரபீக் ஷேக் ஆக்ராவில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் கடந்த மே மாதம் 7-ம் தேதி அவரை கைதுசெய்து மும்பைக்கு அழைத்து வந்தனர். அவர்மீது இம்மாதம் 7-ம் தேதி கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. ரபீக் ஷேக் மீதான குற்றத்தை நிரூபிக்க எந்த வித ஆதாரமும் இல்லை. இரண்டு பேர் சாட்சியம் அளித்தனர். அதில் ரபீக் ஷேக் கூட்டிச் சென்ற பெண்ணின் உறவினர் ஆஜராகி ரபீக் ஷேக்கும் அவர் அழைத்துச் சென்ற பெண்ணும் காதலித்தனர் என்று தெரிவித்தார். அதோடு அப்பெண் தான் விருப்பப்பட்டு ரபீக் ஷேக்குடன் சென்றார் என்றும் வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து இவ்வழக்கில் இருந்து குற்றவாளியை கோர்ட் விடுதலை செய்தது. மிகவும் பழைமையான வழக்கு என்பதால், குற்றவாளியை குற்றத்துடன் இணைப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. சாட்சியங்களும் கிடைக்கவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.