சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் புறக்கணிப்பு? – சிவகாசியில் சர்ச்சையான போட்டோ

இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து விழா பேரூரை ஆற்றினார். அதுபோல அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். இதுபோல ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் அந்தந்த நிர்வாகத்தை சேர்ந்தவர்கள், தலைவர்கள், கமிஷனர்கள் உள்ளிட்டோர் சுதந்திர தினவிழாவை கொண்டாடினர்.

கறுப்பு கொடி

முன்னதாக `உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளில் இருக்கும் பஞ்சாயத்து தலைவர்கள், கிராமங்களில் தலைமை பொறுப்பில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை மறுப்பது சட்டப்படி தவறானது. எனவே யாராவது, உள்ளாட்சி தலைவர்களின் வாய்ப்பை பறிக்கும் விதத்தில் செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தத்தகவல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலாக ஒவ்வொரு ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கும் அனுபப்பட்டுள்ளது. ஆனால் அரசின் இந்த உத்தரவை மீறும் விதமாக, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டியில் ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கணவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் விஜயலட்சுமி. இவரின் கணவர் சந்தானம்.

எதிர்ப்பு

விஜயலட்சுமி ஊராட்சிமன்ற தலைவர் பொறுப்பில் இருந்தாலும் ஊராட்சி வேலைகளை சந்தானமே கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சுதந்திரத்தினத்தன்று(நேற்று), தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான விஜயலட்சுமி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்த அழைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு பதிலாக விஜயலட்சுமியின் கணவர் சந்தானமே ஊராட்சிமன்ற அலுவலகத்தில் சக அலுவலர்கள் முன்னிலையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி விருதுநகர் மாவட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது மாவட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றுள்ளதால், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எதிர்ப்பு

மற்றுமொரு சம்பவமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட் பட்டியில் வாழும் மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணிக்கும் விதமாக வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “இப்பகுதியில் பெரும்பாலானவர்கள் பட்டியல் இன மக்களே வசிக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாகவே எங்கள் பகுதி மக்களுக்கு சமுதாயம் கூடம் இல்லை. ஆகவே ரைட்டன்பட்டியில் பட்டியலின மக்கள் பயன்பாட்டுக்கென சமுதாயக்கூடம் கட்டித் தரவேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். அந்த மனுவின் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு போய்விட்டது. ஆகவே நாங்கள் சுதந்திர தின விழாவை நாங்கள் புறக்கணித்து ஒவ்வொரு வீடுகளிலும் கறுப்புக்கொடி ஏற்றி உள்ளோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88