இந்தியன் தாத்தா பாணியில் கெத்தா Unicycle-ல் கோவை போலீஸ்! மாணவர்களின் கலக்கல் கண்டுபிடிப்பு!

ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்குப் பெயர் பெற்ற கோவை மாவட்டத்தில்,  காவல்துறையும் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கோவை மாநகரக் காவல்துறை, ரோந்துப் பணிகளை எளிமைப்படுத்தும் வகையில் சிறிய ரக எலெக்ட்ரிக் பேட்ரோல் பைக் (Unicycle electric patrol bike) அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கோவை காவல்துறை இ பைக்

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இந்த பைக்கை ஓட்டி ஆய்வு செய்துள்ளார். ‘ஸ்மார்ட் சிட்டி – ஸ்மார்ட் போலீஸ்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஓட்டி வரும், அதே மாதிரியான unicycle பைக் மாடல்தான். கோவை மாநகர காவல்துறை சார்பில் ஏற்கெனவே எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. இதுகுறித்து ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கோவை காவல்துறை இ பைக்

“மூன்று சக்கரங்களைக் கொண்ட இந்த பைக்கை தனியார் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். ஒரு பைக்கின் மதிப்பு ரூ.50,000. சிறிய சாலைகளில் செல்வதற்கு இந்த வாகனம் பயனுள்ளதாக இருக்கும்.

ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம், உக்கடம், குறிச்சி உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் இந்த பைக்கை ரோந்துப் பணிக்காக பயன்படுத்த உள்ளோம். தற்போது அந்தப் பகுதிகளில் காவல்துறையினர் நடந்து சென்றுதான் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.

கோவை காவல்துறை இ பைக்

எனவே, இந்த பைக் ரோந்துப்பணியை எளிமைப்படுத்தும். முதல்கட்டமாக இதுபோன்ற 6 பைக்குகள் அறிமுகப்படுத்த உள்ளோம். இதில் ஒளி விளக்கு, ஜிபிஎஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுக்கும் வகையில், இந்த பைக்குடன் ஒரு மைக் இணைக்கப்பட்டுள்ளது.“ என்று கூறினார்.

சராசரியாக ஒரு மணிநேரத்துக்கு 12 கிமீ வேகத்தில் பயணிக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 கி.மீ செல்லும். சஸ்பென்ஷன் அமைப்புடன் அனைத்து விதமான நிலப்பரப்புக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.  முதலில் இந்த பைக் தனியார் கல்லூரியின் பாதுகாப்பு பணிக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கோவை காவல்துறை இ பைக்

அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, தற்போது அதே மாடலில் கோவை சிட்டியின் பாதுகாப்புக்காகக் களமிறங்கியுள்ளது இந்த டிரைக் இ பைக். கோவையைத் தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சியிலும் இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.