J & K Election: `ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல்’ – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ஜம்மு – கஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2018-ம் ஆண்டு மெகபூபா முப்ஃதி தலைமையிலான பி.டி.பி- பா.ஜ.க கூட்டணி அரசு சரிந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏழு ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைக்கப்படாமல் இருந்தது. அதைத் தொடர்ந்து ஜம்மு – கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது மத்திய பா.ஜ.க அரசு.

ஜம்மு காஷ்மீர்

மேலும், ஜம்மு-வுக்கு 6 கூடுதல் சட்டமன்ற இடங்களும், காஷ்மீருக்கு ஓர் இடமும் என அதிகரித்து, 83 சட்டமன்ற இடங்களை 90-ஆக உயர்த்தி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான 24 இடங்களையும் சேர்த்து மொத்தமாக 107 இடங்களை 114-ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து இரண்டு யூனியன் பிரதேசங்களின் எல்லை நிர்ணயப் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையில், ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான சில மாதங்களில், ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை, தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த அட்டவணையின்படி, ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். அதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ம் தேதி நடைபெற்று, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

`ஜம்மு-காஷ்மீருக்கு எப்போது தேர்தல் நடைபெறும்?’ என்ற மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு, விடை கூறும் வகையில் இந்த தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருப்பதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.