“சர்வாதிகாரத்தால் தேச பக்தியை எப்படி சிறையிலடைக்க முடியும்?” – சுனிதா கெஜ்ரிவால் காட்டம்

டெல்லி மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. ஆனால் சி.பி.ஐ அவரை சிறையிலேயே மற்றொரு வழக்கில் கைது செய்தது. இந்த வழக்கில் தற்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை. ஜாமீன் குறித்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சி.பி.ஐ பதிலளிக்க கூறி வரும் 23-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, அனைவரின் வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.

சுனிதா கெஜ்ரிவால்

அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றினர். இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தேசியாக் கொடி ஏற்றப்படவில்லை. அது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், “இன்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. சர்வாதிகாரத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை சிறையில் அடைக்க முடியும்… ஆனால் இதயத்தில் இருக்கும் தேசபக்தியை எப்படி அடக்க முடியும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.