’ஒரத்தநாடு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் கைது; 60 நாள்களில் தண்டனை’ – எஸ்.பி உறுதி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண், வயது 23. பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரின் தந்தை நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைத்துாக்கும் தொழிலாளி, இவரின் தாய் வெளிநாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார் இளம்பெண். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி மாலை வீட்டிற்கு தனியாக சென்றவரை, தெற்குக் கோட்டையை சேர்ந்த கவிதாசன் (25) என்பவர் மிரட்டி எதிரே உள்ள கொட்டகைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

அங்கே ஏற்கனவே கவிதாசனின் நண்பர்களான பாப்பாநாடு பகுதியை சேர்ந்த திவாகர் (26), பிரவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் மறைந்து நின்றுள்ளனர். நான்கு பேரும் சேர்ந்து கத்தி மற்றும் உடைந்த பீர் பாட்டிலால் குத்தி விடுவதாக மிரட்டி இளம் பென்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். இது தொடர்பாக 12-ம் தேதி இரவு பாதிக்கப்பட்ட இளம்பெண் கவிதாசன் மற்றும் அவர்களது நண்பர்கள் மீது ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். இந்த சம்வம் ஒரத்தநாடு பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து, போலீஸார், கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கஞ்சா போதையில் இந்த கும்பல் இளம்பெண்ணை சீரழித்தது தெரியவந்தது. இது தொடர்பாக எஸ்.பி., ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு ஏ.எஸ்.பி., சகுனாஸ் ஆகியோர் இளம் பெண்ணிடம் நேரில் விசாரணை நடத்தினர். மேலும், கவிதாசன் மீது கடந்த 2020ம் ஆண்டு விவசாயி ஒருவரை கொலை செய்த வழக்கும், பிரவீன் மீது கஞ்சா வழக்கும் இருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சிறுவனை, சிறார் சீர்த்திருத்த பள்ளியிலும், மற்ற மூன்று பேரையும் நீதிமன்ற காவிலில் சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

கஞ்சா போதையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்ட விவகாரம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டதுடன், 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைதும் செய்தனர். இந்தநிலையில் பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதல் குற்றவாளியான கவிதாசன் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தில் இருந்தாக, கவிதாசன் அடையாள அட்டை வைத்திருப்பது போன்ற போட்டோவுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து கவிதாசன் உதயநிதி மன்றத்திலிருந்து விலகி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து விட்டதாக திமுக தரப்பினரால் சொல்லப்பட்டது. கவிதாசன் அதிமுக பிரமுகருடன் இருக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்தநிலையில் பேராவூரணியை சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகியான அரவிந்த் என்பவர் அண்ணாமலைக்கு அவருடைய பதிவிலேயே, பதில் கொடுத்தார். நீங்கள் குறிப்பிடுள்ள கவிதாசன், பாஜகவில் இருக்கிறார், பா.ஜக நிகழ்ச்சி ஒன்றில் வைக்கபட்ட ப்ளக்ஸ் போர்டில் கவிதாசன் இருக்கும் போட்டோவை ஆதாரமாக பதிவிட்டிருந்தார். இதனால் இந்த பாலியல் விவகாரம் அரசியல் ரீதியான பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான கும்பல்

இந்நிலையில் இவ்வழக்கு குறித்து போலீஸ் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் செய்தியாளர்களிடம், “இளம்பெண் பாலியல் வழக்கில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு 24 மணி நேரத்தில் குற்றவாலிகள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் புதிய சட்டத்தின் கீழ், 60 நாள்களில் வழக்கை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும். முக்கிய குற்றவாளிக்கு குண்டாஸ் பதிவு செய்வதற்கு கலெக்டரின் பரிந்துரை கேட்டிருக்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அரசியல் பின்னணியில் உள்ளார்களாக என்றும் விசாரித்து வருகிறோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88