`படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோயிலா?’ மோடிஜி… இது, உங்களுக்கே நல்லாயிருக்கா?

‘கூரை ஏறி கோழி பிடிக்க மாட்டாதவன்… வானம் ஏறி வைகுண்டம் போகப் போகிறேன்’ என்று சொன்ன கதையாக இருக்கிறது, பாரத அல்லது இந்திய பிரதமர் மோடிஜி புதிதாக அடித்துவிட்டிருக்கும் அண்டப்புளுகு டயலாக். இந்த மாதத்தின் துவக்கத்தில், உலக விவசாய பொருளாதார வல்லுநர்களுக்கான 32-வது கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது. இதைத் துவக்கி வைத்துப் பேசிய மோடிஜி பேசிய பேச்சு, உலக அளவில் சிரிப்பாய் சிரிக்கிறது! 

மோடி

‘’உணவு உற்பத்தியில் உலகுக்கே வழிகாட்டுகிறது இந்தியா. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் தேவையைப் பூர்த்தி செய்ததுபோக, உணவு தானியங்களும் பருப்பு வகைகளும் ஏற்றுமதி செய்கின்ற அளவுக்கு இந்தியாவில் விளைச்சல் அபரிமிதமாக இருக்கிறது’’என்று சந்தடி சாக்கில் அடித்து விட்டிருக்கிறார் மோடிஜி. 

இந்தியாவின் பருப்பு தேவை 45 மில்லியன் டன். ஆனால், உற்பத்தியோ… இன்னும் 26 மில்லியன் டன் என்றே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. டயலாக்கை எழுதிக் கொடுத்த அதிகாரிகள், மோடியை வேண்டுமென்றே மாட்டி விட்டார்களா? அல்லது ‘ச்சும்மா சொல்லி வைப்போமே… காசா பணமா’ என்று மோடியே ‘ச்சும்மா’ அடித்துவிட்டாரா என்று தெரியவில்லை. 

இத்தோடு நிறுத்திக் கொண்டால்கூட பரவாயில்லை. ‘கொடுத்த காசுக்கு மேல கூவறார்ய்யா’ என்கிற கதையாக…
‘’விவசாயம் செய்வது எப்படி என்று எங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எங்களுடைய அனுபவம் மற்றும் செயல்முறையை கற்றுக்கொள்ளுங்கள்’’ என்று உலக நாடுகளை நோக்கி ஓதியிருக்கிறார் மோடி.

உணவு உற்பத்தி!

யதார்த்தம் என்னவோ வேறு மாதிரியாக இருக்கிறது என்பதே உண்மை. சென்ற ஆண்டு இந்தியாவின் உணவு உற்பத்தி 320 மில்லியன் டன். 142 கோடி மக்களுக்குக் கணக்கிட்டால்… ஓராண்டுக்கு ஒரு நபருக்கு வெறும் 220 கிலோதான் கிடைக்கிறது.
18 வயதுக்கு மேற்பட்ட ஓர் ஆண் அல்லது பெண் வளமாக, நலமாக இருக்க வேண்டும் என்றால், 2000 முதல் 2500 கலோரி வரையிலான சக்தி தேவைப்படும். 2000 கலோரி சக்தி தேவை என்றால், குறைந்தது ஒரு கிலோ உணவு தானியம் மற்றும் 125 கிராம் பருப்பு தேவைப்படும். ஆனால், இந்திய மக்களுக்கு கிடைப்பதோ ஒரு நாளைக்கு 600 கிராம் மட்டுமே! இந்த லட்சணத்தில்தான், ‘’நாடு ஏற்றுமதி செய்கிறது’’ என்று கூத்தடித்திருக்கிறார் மோடிஜி. 

பாதி மக்கள் பட்டினி கிடந்து வாங்க வக்கற்று ஒட்டிய வயிறும் கிட்டிய பார்வையுமாக காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மையை மறைத்து, தான் போட்டிருக்கும் படாடோப கோட்டின் மரியாதை கிழிந்து விடக்கூடாது என்பதற்காக ‘’உணவு உற்பத்தியில் இந்தியாவே துள்ளி குதிக்கிறது… அள்ளி குவிக்கிறது’’ என்று கூச்சம் நாச்சம் இல்லாமல் அந்த உலக மேடையில் பொய் வேஷம் கட்டியிருக்கிறார் மோடிஜி.

உலக நாடுகளை விட்டுத்தள்ளுவோம். முதலில், பக்கத்து நாடான சீனாவின் உணவு உற்பத்தி 500 மில்லியன் டன். அதை எட்டுவதற்கே நம்மால் முடியுமா… முடியாதா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் நம் நாட்டின் வேளாண் விஞ்ஞானிகள். இது எதையுமே கருத்தில் கொள்ளாமல், நம்ம முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவதுபோல, ‘மாங்காய் புளித்ததோ… வாய் புளித்ததோ’ என்று தெய்வக் குழந்தை மோடிஜி, பிதற்றி இருக்கிறார்.

உணவு தானியங்கள்

மற்ற நாடுகளைவிட குறைவான உற்பத்திதான் என்றாலும்கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டுதான் உணவு தானியங்களை விவசாயிகள் விளைவிக்கிறார்கள். ஆனால், கட்டுப்படியான விலை கொடுத்து அரசு கொள்முதல் செய்கிறதா? அதற்கும்கூட விவசாயிகளிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு கொள்முதல் செய்கிறார்கள். அந்த உணவு தானியங்களையாவது உருப்படியாக பாதுகாத்து, மக்களுக்கு வழங்குகிறார்களா? எலி, பெருச்சாளி எல்லாம் தின்றதுபோக, புழுத்து நாறிப்போன பிறகு குப்பையில் கொட்டுகிறார்கள். இல்லையென்றால் மழையில் நனையவிட்டு, முளைக்கவிட்டு, பிறகு தூர வீசுகிறார்கள்.

உணவு பாதுகாப்பு என்பது உலக அளவில் பெரும் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆனால், இந்தியாவில் ஓரளவுக்கு விளையும் உணவு தானியங்களையும்கூட ஒழுங்காக பாதுகாக்க முடியாமல் மழையிலும் வெயிலிலும் நாசமாக்கிக் கொண்டுள்ளனர்.

உண்மை இப்படி உலக அளவில் பல்இளிக்க… தெற்குலக நாடுகளுக்கே இந்தியா வழிகாட்டுகிறதாம்? சமீபத்திய தேர்தலில் விழுந்த அடி… விவசாயிகளைப் பற்றியே மோடியை யோசிக்க வைக்கிறது. சித்தம் கலங்கிப் போயிருப்பது நன்றாகப் புரிகிறது. அதற்காக பொய்..? கிலோ கணக்கில்கூட இல்லை, டன் கணக்கில் அவிழ்த்துவிடுகிறார் ஜி!

எப்படியோ அம்மி குத்தி… திம்மி குத்தி உணவு தானியங்களை பொறுத்தவரை பாதி வயிற்றுக்காவது விவசாயிகள் கடன்பட்டு, கண்ணீர் விட்டு உற்பத்தி செய்து விடுகிறார்கள். ஆனால், ஊட்டச்சத்து மிகுந்த பருப்பு வகையறாக்களுக்கு பிரேசில், அர்ஜென்டைனா, மொசாம்பியா, தான்சானியா, கனடா, ரஷியா, மியன்மர், ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளைத்தான் நம்பிகிடக்க வேண்டியிருக்கிறது.

துவரம் பருப்பு

இதிலும் ஒரு கொடுமை என்னவென்றால்… வரியே இல்லாமல் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். ‘இந்திய விவசாயிகளை காப்பாற்றுவதற்கு நூறு சதவிகிதம் வரை பருப்புக்கு இறக்குமதி வரி விதிக்கலாம் என்று உலக வர்த்தக மையம் (WTO) ஒப்புதல் அளித்திருக்கிறது. ஆனாலும், வரியே இல்லாமல் இறக்குமதி செய்கிறது மத்திய அரசு. இதன் மூலம், நம் விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.

ஆக, தொடர்ந்து இந்திய விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கிறார்கள். முன்பு காங்கிரஸ் அரசு ஒடித்தது… மீதியை இப்போது பிஜேபி அரசு ஒடித்துக்கொண்டே இருக்கிறது. ஆட்சியில் உட்கார்ந்துவிட்டால்… கதரென்ன… காவியென்ன? எல்லாம் ஒரே பாத்திரத்தில் வெந்த முட்டைகள்தான்!

ஆண்டுக்கு 15 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்துகொண்டிருக்கும் நிலையில், உலக நாடுகளுக்கே ஏற்றுமதி செய்கிறோம் என்று சும்மா அடித்துவிட்ட மோடிஜி, கூடவே, ‘இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வருகிறோம்… நிலைத்த நீடித்த விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறோம்’ என்றுகூட புளுகித் தள்ளி இருக்கிறார். 

ஆண்டுதோறும் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ரசாயன உரத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மானியத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டே இந்த மகராஜன்… ‘நஞ்சில்லா உணவே எங்கள் லட்சியம் என்று கூறுவது… ‘படிக்கிறது ராமாயணம்… இடிக்கிறது பெருமாள் கோயில்’ என்பதாகத்தானே இருக்கிறது.

இயற்கை விவசாயம்

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். வருங்கால சந்ததிகளின் வாழ்வை நாசப்படுத்தாமல், இயற்கையை சேதப்படுத்தாமல், பூமியை மாசுபடுத்தாமல், காற்றை கரிமண்டலமாக்காமல், தண்ணீரை ரசாயன சாக்கடையாக மாற்றாமல்  விட்டுச் செல்லவேண்டும். எதையும் சிதைக்கவோ… சீரழிக்கவோ கூடாது. ஆனால், இங்கு நடந்து கொண்டிருப்பது என்ன? எங்கு நோக்கினும் கருங்கல் வெட்டியெடுக்கும் சுரங்கங்கள்; ஜல்லிகளை உடைக்கும் கிரசர்கள்; நிலக்கரிச் சுரங்கங்கள்; ரசாயன ஆலைகள், ரசாயனக் கழிவுகளைச் சுமந்து செல்லும் ஆறுகள்… எப்படி இளைய தலைமுறை வாழமுடியும்?
அளவுக்கு அதிகமாக டீசல், பெட்ரோலியம் பயன்படுத்துவதால் காற்று மண்டலம் கரிமண்டலம் ஆகி வருகிறது. வாகனங்கள் உமிழும் கரிமம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது; சுவாசிக்க முடியாமல் உயிரினங்களின் நுரையீரல்கள் கதறுகின்றன.
இதையெல்லாம் வகையாக மறைத்துவிட்டு… ‘வீடு நலமாக இருக்கிறது; நாடு நலமாக இருக்கிறது; காடு நலமாக இருக்கிறது’ என்றபடி கார்ப்பரேட்டுகளுக்கு பாதபூஜை செய்து கொண்டிருக்கிறார் மோடி!

மக்களே… இந்த நாட்டை பேராபத்து சூழ்ந்திருக்கிறது. அபாயம் ரஷ்யாவால் அல்ல; அமெரிக்காவால் அல்ல; பக்கத்து வீட்டுக்கார சீனாவால்கூட அல்ல. வரம்பற்று வந்து குவியும் கார்ப்பரேட்டுகளாலும் வரம்பை மீறி இயற்கை சிதைக்கப்படுவதாலும் இந்த மண் மரணித்துக் கொண்டேயிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்!
மத்தியில் இந்தத் தடவை விவசாயத்துறைக்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தெரிந்தோ தெரியாமலோ… ஓர் உண்மையைப் போட்டு உடைத்து இருக்கிறார். ‘முந்தைய காங்கிரஸ் அரசு மரபணு மாற்று விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதனால், விவசாயம் மட்டுமல்ல… விவசாயிகளும் மக்களும் பாதிக்கப்படுவார்கள்’என்று சொல்லியிருக்கிறார்.

கடுகு

ஆக, மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் பாதிப்பு என்பதை ஒப்புக் கொண்ட வரையில் மிக்க மகிழ்ச்சி. ஆனால், மோடி தலைமையில் மூன்றாவது தடவையாக அமைந்திருக்கும் பி.ஜே.பி கூட்டணி அரசாங்கம்… காங்கிரஸ் போட்டுக் கொடுத்த பாதையிலிருந்து இம்மியளவும் விலகவில்லை என்பதை மட்டும் சொல்ல மறந்துவிட்டார் சவுகான்ஜி.

மரபணு மாற்றப்பட்ட கடுகை வயல்வெளியில் பயிரிட ஒப்புதல் கொடுத்து இருக்கிறது, மோடி அரசு. இதைத் தொடர்ந்து மரபணுமாற்றப்பட்ட கத்திரிக்காய் உட்பட 28 வகையான பயிர்கள் வரிசை கட்டி நிற்கின்றன. 
மரபணு மாற்று விதை என்பது… விதைகளின் மரண சாசனம். ஆம், விவசாயத்தின் மூச்சை முற்றிலுமாக ஒருகட்டத்தில் நிறுத்திவிடும் எமன். இதையெல்லாம், ஆட்சி அதிகார போதையில் உட்கார்ந்திருக்கும அரசர்களாக அல்லாமல்… சாதாரண மனிதர்களாக புரிந்துகொள்ளுங்கள்.

பாரம்பர்ய நெல் விதைகள்

விதை, விவசாயிகளின் சொத்து. அது மெள்ள மெள்ள வணிகப் பொருளாக மாறிக்கொண்டே இருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள்…. மரண சாசனம் எழுதிவிடாதீர்கள்.
‘அணு உலை உள்ளவன்தான்… இந்த உலகை ஆளமுடியும்’ என்று பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அடுப்பு உலை யாருடைய கையில் வலுவாக இருக்கிறதோ… அவர்களே எதிர்காலத்தில் இந்த பூமிப் பந்தை ஆளப்போகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். இதை மனதில் நிறுத்தி செயல்படுங்கள்!

-தூரன் நம்பி