ரூ.90-க்கு காலாவதி முறுக்கு விற்பனை; `ரூ.5,000 அபராதம்; 3 மாதம் இலவச மரக்கன்று’- கன்ஸ்யூமர் கோர்ட்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தேதி காலாவதியான முறுக்கு பாக்கெட் விற்ற சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது இது குறித்து நீதிமன்ற அலுவலர்களிடம் விசாரித்தோம் அப்போது நம்மிடம் பேசியவர்கள், “ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர், தனது வசிப்பிடப் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.எல்.என் சூப்பர் மார்க்கெட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 2 முறுக்கு பாக்கெட்டுகளை 90 ரூபாய்க்கு வாங்கி உள்ளார். வீட்டிற்கு சென்று, வாங்கிய முறுக்கை செல்லத்துரையும், அவரின் மனைவியும் சாப்பிட்ட நிலையில் இருவருக்குமே உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதைத் தொடர்ந்து முறுக்கு பாக்கெட்டை சோதித்து பார்த்ததில் தேதி காலாவதியான முறுக்கு பாக்கெட்டை சூப்பர் மார்க்கெட் நிறுவனம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து, செல்லத்துரை சம்பந்தப்பட்ட முறுக்கு தயாரிப்பு நிறுவனமான அருண் ஸ்நாக்ஸ் மற்றும் சூப்பர் மார்க்கெட்டிற்கு புகார் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முறையான பதில் அளிக்காத காரணத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் செல்லத்துரை வழக்கு தொடர்ந்தார். இந்தவழக்கை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி, ‘உணவுத்தீனி தயாரிப்பு நிறுவனமான அருண் ஸ்நாக்ஸ், பாதிக்கப்பட்டவருக்கு முறுக்கு பாக்கெட் விலை 90 ரூபாயை திரும்ப தர வேண்டும், பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5,000 ரூபாய், வழக்கு செலவுத்தொகையாக 5,000 ரூபாயை வழக்கின் எதிர்தரப்பினர் சேர்ந்தோ அல்லது தனித்தோ வழங்கவேண்டும்.

நுகர்வோர் ஆணையம்

இதுதவிர வழக்கின் எதிர்தர்பபினர், சேர்ந்தோ அல்லது தனித்தோ ஏ.எல்.என். சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்கள் தொடர்ந்து ‘மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’, ‘விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்துளி’, ‘ இயற்கை காப்போம்’ உள்ளிட்ட வாசகங்களுடன் மரம் வளர்ப்பதன் பயன் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை 500 மரங்கன்றுகளுக்கு குறையாமல் இலவசமாக வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

இதுபோல, ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த முரளி என்பவரும், ஏ.எல்.என். சூப்பர்மார்க்கெட், அருண் ஸ்நாக்ஸ் மற்றும் உணவு பாதுகாப்பு கமிஷனர் சென்னை ஆகியோருக்கு எதிராக குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கிலும், அருண் ஸ்நாக்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்டவருக்கு அவர் வாங்கிய முறுக்கு பாக்கெட்டின் விலை ரூ.45-ஐ திரும்ப செலுத்தவேண்டும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.5,000 மற்றும் மன உளைச்சலுக்கு ரு.5,000, மரக்கன்று மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ஆகியவற்றை வழக்கின் எதிர்தரப்பினர் வழங்கவேண்டும் என தீர்ப்பளித்திருந்தார்” என்றனர்.