வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கையால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வங்கதேசம் கலவர பூமியானது. அதைத் தொடர்ந்து, மாணவர்களின் போரட்டத்தின் உச்ச கட்டமாக, வங்கதேச தலைநகர் டாக்காவில் இருக்கும் பிரதமர் மாளிகை முற்றுகையிடப்பட்டது. அதன் விளைவாக வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதற்கிடையில், ஷேக் ஹசீனா கூறியதாக தனியார் செய்தி நிறுவனம், “பிரதமர் பதவியை நான் ராஜினாமா செய்ததற்கான காரணம், மேலும் வன்முறை தொடரக் கூடாது, உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என்பதுதான். மாணவர்களின் ஒரு பகுதியினர் இறந்த உடல்கள் மீது அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். மாணவர்களை தூண்டுவதற்காக எனது வார்த்தைகள் திரிக்கப்பட்டன. வங்கதேசத்தை ஆட்சி செய்ய அமெரிக்காவை அனுமதித்திருந்தால், இந்நேரம் நான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்கலாம்.” எனக் கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத், “முற்றிலும் பொய்யானது, புனையப்பட்டது. வங்கதேசத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அவர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை” என மறுத்திருந்தார். இந்த நிலைலையில்தான் சஜீப் வசேத் எக்ஸ் பக்கத்தில் ஷேக் ஹசீனாவின் அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதில், “ஆகஸ்ட் 15, 1975 அன்று என் தந்தை முஜிபுர் ரஹ்மான், என் அண்ணன்கள் அவர்களது மனைவிகள், அத்தைகள், சகோதரரின் குடும்பம், நெருங்கிய சகாக்கள், உறவினர்கள், நண்பர்கள் என ஒருவர் விடாமல் ஒரே இரவில் இராணுவத்தால் அழிக்கப்பட்டவர்களுக்கு எனது அஞ்சலி. போராட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் நடந்த அழிவாட்டத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறை, பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், பொது மக்கள், அவாமி லீக்கின் தலைவர்கள், தொண்டர்கள், அலுவலக ஊழியர்கள் எனப் பலரை இழந்திருக்கிறோம்.
என்னைப் போலவே, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த படுகொலையில், இந்த அழிவில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். போராட்டக்காரர்கள் என்னை மட்டும் குறிவைக்கவில்லை, அருங்காட்சியகமாக இருந்த நான் வளர்ந்த வீட்டையும் குறிவைத்தனர்.
அது இப்போது மண்ணாகி விட்டது… ஆயிரக்கணக்கானோர் சிந்திய ரத்தத்தால், யாருடைய தலைமையில் நமக்கு சுதந்திரம் கிடைத்ததோ, அங்கீகாரமும், சுயமரியாதையும் கிடைத்ததோ, அந்த சுதந்திரப் போராட்ட வீரர் முஜிபுர் ரஹ்மானின் சிலை சிதைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். எனது நாட்டு மக்களிடம் இதற்கான நீதியைக் கோருகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.