அடுத்தடுத்து முக்கிய கூட்டங்கள்: உதயநிதியை துணை முதல்வராக்க தயாராகிவிட்டதா தலைமை?!

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த அடுத்த நாளில் இருந்தே தி.மு.க-வில் அமைச்சரவை மாற்றம் இருக்கும், உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவார், மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் இருக்கும் என்ற பேச்சு பரவலாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், தலைமையிலிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தச் சூழலில், உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவது குறித்து அமைச்சர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

ராமநாதபுரத்தில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “அமைச்சர் உதயநிதி ஸ்டலின் வகிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் வளர்ச்சித் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” என்றவர், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்” எனச் சொல்ல, சட்டெனச் சுதாரித்துக்கொண்டவர்போல, “வரும் 19-ம் தேதிக்குப் (ஆகஸ்ட்) பிறகுதான் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் எனக் கூற வேண்டும். அதற்கு முன்பு சொல்லக்கூடாது” என்றார்.

அதற்கு அடுத்தநாள் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைக்காக 1 கோடியே 50 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அதில் ஒரு கோடிக்கும் மேலானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் மனுக்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருங்கால துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துறையின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” எனப் பற்ற வைத்தார்.

உதயநிதி, ஸ்டாலின்

திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராக ஆகும் தகுதி இருக்கிறது, இளைஞர் அணி செயலாளர் எந்த உயரத்திற்கும் வரலாம்” எனப் பேசினார்.

தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதியைத் துணை முதல்வராக வைத்துப் பேசுவதும் கட்சியில் அடுத்தடுத்து நடக்கும் கூட்டங்களில் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையும் வைத்து எதிர்க்கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்தனர். அமைச்சர்கள் பேச்சும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் வைத்து உதயநிதியைத் துணை முதல்வராக்க ஆளுந்தரப்பு முடிவு செய்திருக்கிறதா என்ற விசாரணையில் இறங்கினோம்.

“ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் அமெரிக்கா செல்லவுள்ளார். அதற்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் இருக்கும். ஒரு சில அமைச்சர்களுக்கு மட்டும் பொறுப்பு மாறும் சூழல் இருக்கிறது. இருவர் புதிதாக அமைச்சரவைக்குள் வரும் சூழலும் இருக்கிறது.” எனப் பேசத் தொடங்கினார் சீனியர் அமைச்சர் ஒருவர்… மேலும் தொடர்ந்தவர், “செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தால் அவரும் அமைச்சரவையில் இடம்பெறுவார். ஆனால், உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழக்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதுதான், சீனியர்கள் தொடங்கி, ஜூனியர் அமைச்சர்கள் வரையில் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்களின் விருப்பம். அதையொட்டித்தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறதே என்ற கேள்விக்கு, “வலுத்திருக்கிறது. ஆனால், பழுக்கவில்லை” என முதல்வர் பதலளித்தார்.

முதல்வர் ஸ்டாலின்

இப்போதுவரை அது பழுக்கவில்லை என்பதுதான் உண்மை. இதையொட்டி நடந்த ஆலோசனையின்போது ‘எதிர்க்கட்சிகள் விமர்சிக்க நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததுபோல ஆகிவிடுமோ?’ எனத் தலைமை தனது தயக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அதற்குச் சில சீனியர்கள், ‘எதிர்க்கட்சிகள் எந்தக் காரணத்துக்காகவும் நம்மை பாராட்டிப் பேசப் போவதில்லை. உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்காவிட்டாலும் எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நம்மை விமர்சிக்கத்தானே செய்வார்கள். எனவே, அதற்காகவெல்லாம் தயங்க வேண்டாம்’ எனச் சொல்லியிக்கிறார்கள். ஆனாலும், ‘இப்போதுவரை உதயநிதியைத் துணை முதல்வராக அறிவிப்பது தொடர்பாக மட்டும் எந்த முடிவும் எடுக்கவில்லை” என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88