“தலித் முதல்வர் பற்றிய திருமாவின் கருத்தில் உடன்படுகிறேன்..!’ – சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், திருமாவளவன் தெரிவித்த கருத்து குறித்து பேசினார். “திருமாவளவன் ஒட்டுமொத்த அரசாங்கத்தை குறிப்பிடுகிறாரா, சமுதாயத்தை குறிப்பிடுகிறாரா என்று பார்க்க வேண்டும். அவர் சமுதாயத்தைத்தான் குறிப்பிடுகிறார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பல மாநிலங்களில் தலித் தலைமையை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். அதை நான் கண்கூடாக பார்த்து உள்ளேன். அனுபவ ரீதியாகவும் அறிந்துள்ளேன். அதனால், ‘பல மாநிலங்களில் தலித்தை முதலமைச்சர் என்று அறிவித்தால் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் முன்னேற்றம் வரவில்லை’ என்று அவர் சொல்லும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் கக்கனுக்கு பிறகு தலித் ஒருவர் முக்கியமான அமைச்சர் பொறுப்புக்கு வர முடியவில்லை என்பதை ஆட்சி செய்பவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

கார்த்தி சிதம்பரம்

ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் பின்னணியால் நடந்த கொலை என்று நான் கூற மாட்டேன். முன்விரோதமா அல்லது வர்த்தக ரீதியாக வந்த கருத்து வேறுபாட்டால் கொலை நடந்திருக்கலாமே தவிர, அரசியல் ரீதியாக இந்த கொலை நடந்ததாக ஏற்றுக்கொள்ள முடியாது. அது உண்மையும் கிடையாது. அரசியல்வாதிகள் யாரும் ரௌடியாக மாறவில்லை. காலம் காலமாக அரசியல் கட்சியில் இருப்பவர்கள் ரௌடியாக மாறவில்லை. சமீபகாலமாக ரௌடிகள் பலர் பல கட்சிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த அடிப்படையில் தான், பல கட்சியில் இருப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பாரம்பர்யமாக அரசியல் கட்சியில் இருப்பவர்கள் ரௌடியிசம் செய்வது கிடையாது. ரௌடிகள் அவர்களின் பாதுகாப்பிற்காக அரசியல் கட்சியில் செல்கின்றனர். குறிப்பாக, பா.ஜ.க-வில் 263 ரௌடிகள் சேர்ந்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் பட்டியலிட்டார். அப்படி, சேரக்கூடிய ரௌடிகள் அரசியல் பாதுகாப்பிற்காக கட்சியில் சேர்கின்றனர். தற்போது, கட்சியில் உள்ளவர்கள் கைது செய்யப்படுகின்ற நிலையில் அந்த சாயத்தை அரசியல் கட்சியின் மீது பூச நான் விரும்பவில்லை. எனது மனதில் பட்ட கருத்தினை நான் எப்போதும் தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

கார்த்தி சிதம்பரம்

நான் நியாயமான பட்டதை எப்போதும் பேசித்தான் வருகிறேன். இப்போதுதான் என் பேச்சு கவனம் பெற்றுள்ளது. நான் ஏற்கனவே பேசியதை ஒருவர் தவிர வேறு எவரும் எதிர்க்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் அனைவருமே புதுக்கோட்டையில் நான் பேசிய பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சவுக்கு சங்கர் விவகாரத்தில் நான் கொடுத்த அறிக்கையை முழுமையாக படித்து பார்க்க வேண்டும். சவுக்கு சங்கர் சர்ச்சையான கருத்துக்களை கொச்சையான கருத்துக்களை சொல்லக்கூடியவர். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனில் அதற்கு பொருந்திய சட்டங்கள் உண்டு. குண்டாசில் போடுவது பொருத்தமா இல்லையா என்ற கேள்வியைத் தான் நான் எழுப்பி இருந்தேன். சவுக்கு சங்கர் என்னை கூட விமர்சனம் செய்துள்ளார். அவர் விமர்சனம் பண்ணாத ஆளே கிடையாது. அவர் சொல்லும் கருத்துக்கு எல்லாம் நான் வக்காலத்து வாங்கவில்லை. அவர் சொல்வது சரி என்று நான் சொல்லவில்லை. நான் குண்டாஸ் போடுவது சரியா, இல்லையா என்று தான் கூறியிருந்தேன். இப்பதான் ஒரு குண்டாஸ் அவர் மீது போடப்பட்டு நீதிமன்றமே ரத்து செய்திருந்தது. மீண்டும் குண்டாஸ் போடப்பட்டது குறித்து தான் நான் கேள்வி எழுப்பியிருந்தேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88