இன்னும் மூன்று மாதங்களில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான பிரசாரங்களில் இருவரும் ஒருவரையொருவர் சாடிவரும் அதேவேளையில், பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உதவி ஆகியவற்றின் காரணமாக இருவருக்கெதிராகவும் கணிசமான மக்கள் குரலெழுப்பி வருகின்றனர்.
இவ்வாறிருக்க, X சமூக வளைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், டொனால்ட் ட்ரம்பை நேற்றிரவு X வலைதள ஸ்பேஸஸில் (X spaces) நேர்காணல் செய்திருந்தார். இதில் கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், அவர் ஒரு மூன்றாம் தர வேட்பாளர் என்றும், ஜோ பைடனை விடவும் திறமையற்றவர் என்றார்.
மறுபக்கம் இந்த நேர்காணலை கமலா ஹாரிஸின் பிரசார தரப்பான ஹாரிஸ்-வால்ஸ், “ட்ரம்பின் முழு பிரசாரமும், எலான் மஸ்க் மற்றும் அவரைப்போன்ற பணக்காரர்களுக்கானது. ட்ரம்பை மீண்டும் அதிபராக்க உதவுவதற்காக மில்லியன் கணக்கான டாலர்களை நன்கொடையாக வழங்குவதாக எலான் மஸ்க் உறுதியளித்தது போதாது போல. அதனால், உலகின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றான மற்றும் அவர் வாங்கிய சமூக வளைதளத்தை, ட்ரம்பின் வெறுக்கத்தக்க அஜெண்டாவை மில்லியன் கணக்கான பயனர்களுக்கு பரப்ப பயன்படுத்துகிறார்” என்று விமர்சித்தது.
இந்த நிலையில், தன்னுடைய X வலைதள ஸ்பேஸஸில் நேர்காணலில் கலந்துகொள்ள கமலா ஹாரிஸுக்கு எலான் மஸ்க் அழைப்பு விடுத்திருக்கிறார். இருப்பினும், கமலா ஹாரிஸ் இதில் இதில் கொள்வாரா என்பது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது. காரணம், கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஒரு நேர்காணலில்கூட அவர் கலந்துகொள்ளவில்லை.