செந்தில் பாலாஜி: அவசர அவசரமாக மாறும் வாட்ஸ்அப் டி.பி – கலக்கத்தில் கோவை உடன்பிறப்புகள்?

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த ஓராண்டாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு, செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி உள்ளிட்ட செய்திகள் மட்டுமே அதிகம் வெளியாகின. இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

செந்தில் பாலாஜி

இதனால் அவரின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதேநேரத்தில் மறுபக்கம் செந்தில் பாலாஜிக்கு விடுதலை கிடைத்துவிடுமோ என்று கோவை உடன்பிறப்புகள் கலக்கத்திலும் இருக்கின்றனர்.

இது குறித்து கோவை உடன்பிறப்புகள் கூறுகையில், “மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் செந்தில் பாலாஜி கோவை பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். சிறைக்கு சென்றாலும் கோவை  திமுக செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. கோவை எம்.பி கணபதி ராஜ்குமார், சமீபத்தில் மேயராக பதவியேற்ற ரங்கநாயகி அவரின் ஆதரவாளர்கள்தான்.

கோவை

செந்தில் பாலாஜி இருந்தவரை அவரை மீறி ஆதிக்கம் செய்ய முடியாதவர்கள் கடந்த ஓராண்டாக உற்சாகத்தில் இருந்தனர்.  தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்தனர். அவரால் பதவி பெற்று லாபமடைந்தவர்கள்கூட, அவரின் பெயர் படம் இல்லாமல் போஸ்டர், பேனர், சுவர் விளம்பரங்கள் அமைத்துக் கொண்டிருந்தனர்.

தற்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருப்பதால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அவசர அவசரமாக வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் செந்தில் பாலாஜியின் படத்தை முகப்புப் படமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். அவரின் வருகையை எதிர்நோக்கி காத்திருப்பதுபோல ஸ்டேட்டஸ்களை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

செந்தில் பாலாஜி

இவை அனைத்தும் அவர்களின் பதவிகளை காப்பாற்றிக் கொள்வதற்குத்தான். அதே நேரத்தில் கடந்த ஓராண்டாக இவர்களின் நடவடிக்கைகளை கரூர் கம்பெனி கண்காணித்துள்ளது என்பதையும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.” என்றனர்.