வேலூர்: பெண் ஊராட்சி மன்றத் தலைவர் `தகுதி நீக்கம்’ – அரசிதழில் வெளியான அதிரடி உத்தரவு!

மிழகத்தில், மறுசீரமைக்கப்பட்ட வேலூர் உட்பட 9 புதிய மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்துக்குஉட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியல் சமூகப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. இந்தப் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ் என்ற பெண் வெற்றிப் பெற்று, ஊராட்சி மன்றத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், “கல்பனா சுரேஷ் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் ”என்றும், “தேர்தல் வேட்புமனுவில் `இந்து – ஆதி திராவிடர்’ என போலி சாதிச் சான்றிதழை இணைத்துக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்’’ எனவும் புகார் எழுந்தது.

போலி சாதிச் சான்றிதழ் விவகாரம்

இதுதொடர்பாக, கல்பனா சுரேஷை எதிர்த்துப் போட்டியிட்ட தோளப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்ததோடு, உயர் நீதிமன்றத்தையும் அணுகியிருந்தார். மாவட்ட ஆட்சியர்தான் `ஊராட்சிகளின் ஆய்வாளர்’ என்பதால், இது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் `விழிக்கண்’ குழு விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையில், `கல்பனா சுரேஷ் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை’ என்றும், வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்த சாதிச்சான்றிதழ் ‘போலி’ என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரின் சாதிச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டதோடு, அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான ‘காசோலையில் கையெழுத்திடும் உரிமை’யும் [ செக் பவர் ] அதிரடியாக பறிக்கப்பட்டது.

அரசிதழில் வெளியான உத்தரவு

அதோடு, வேப்பங்குப்பம் காவல் நிலையத்திலும் கல்பனா சுரேஷ் மீது `போலிச் சான்றிதழை கொடுத்து ஏமாற்றுதல்’, `பொதுப் பதிவேட்டின் பதிவுகளை போலியாக உருவாக்குதல்’, `தெரிந்தே குற்றம்புரிதல்’, `எஸ்.சி-எஸ்.சி வன்கொடுமை தடுப்புப் பிரிவுகள்’ உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், கல்பனா சுரேஷ் `தகுதி நீக்கம்’ செய்யப்பட்டு, அதற்கான நடைமுறை உத்தரவும் `அரசிதழில்’ வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், `1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகளின் சட்டப் பிரிவின்படி, கல்பனா சுரேஷ் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியினை வகிக்கத் தகுதியற்றவர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.