`கல்லூரி பாடத்திட்டத்தில் RSS தலைவர்கள் எழுதிய புத்தகங்களை இணைக்க வேண்டும்’ – ம.பி அரசு உத்தரவு!

மத்தியப் பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) தலைவர்கள் எழுதிய புத்தகங்களை, பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என மத்தியப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மாநில உயர்கல்வித்துறையின் மூத்த அதிகாரி டாக்டர் திரேந்திர சுக்லா, அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், “மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் 88 புத்தகங்கள் கொண்ட தொகுப்பை இணைக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக

அதில், ஆர்.எஸ்.எஸ்-ஸின் கல்விப் பிரிவான வித்யாபாரதியுடன் தொடர்புடைய சுரேஷ் சோனி, தினாநாத் பத்ரா, டி அதுல் கோத்தாரி, தேவேந்திர ராவ் தேஷ்முக், சந்தீப் வாஸ்லேகர் போன்ற முக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களால் எழுதப்பட்ட படைப்புகள் இடம்பெறவேண்டும்.

எனவே, இந்த புத்தகங்களை காலதாமதமின்றி வாங்கவேண்டும் என கல்லூரிகளை உயர்கல்வித்துறை கேட்டுக் கொள்கிறது. மேலும், இந்தப் புத்தகங்களை பல்வேறு இளங்கலைப் படிப்புகளில், அறிமுகப்படுத்துவதற்கு வசதியாக, ஒவ்வொரு கல்லூரியிலும் ‘பாரதிய ஞானப் பரம்பரா பிரகோஷ்தா’ (இந்திய அறிவுப் பாரம்பர்யக் களம்) அமைக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டு, 88 புத்தகங்களின் பட்டியலையும் வழங்கியிருக்கிறது.

இந்த விவகாரம் அரசியலரங்கில் விவாதமாகியிருக்கிறது.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ்

மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கே.கே.மிஸ்ரா, “பா.ஜ.க தலைமையிலான மாநில அரசு, மாணவர்களுக்கு பிளவுபடுத்தும் மற்றும் வெறுப்பை வளர்க்கும் சித்தாந்தத்தை கற்பிக்க முயற்சிக்கிறது. பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் படைப்புகள் அனைத்தும், கல்வித் தகுதியை விட ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தில் வேரூன்றியவை. இப்படிப்பட்ட ஆசிரியர்களின் புத்தகங்கள் கல்வி நிறுவனங்களில் தேசபக்தியையும் தியாகத்தையும் தூண்டுமா? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த உத்தரவு ரத்து செய்யப்படும். இந்த உத்தரவு தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உடன் ஒத்துப்போகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்தியப்பிரதேச பா.ஜ.க மாநிலத் தலைவர் வி.டி. ஷர்மா, “அரசின் இந்த முடிவை ஆதரிக்கிறேன். மாணவர்களின் அறிவு, ஒட்டுமொத்த ஆளுமையில் புத்தகங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கல்வியை காவிமயமாக்குவதில் என்ன தவறு? இடதுசாரி சிந்தனையாளர்கள் ஒரு காலத்தில் பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் திணித்த தேசவிரோத சித்தாந்தத்தையா நாங்கள் ஊக்குவிக்கிறோம்?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், முந்தைய பா.ஜ.க ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்தே அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம், ராமர் மற்றும் கிருஷ்ணரின் போதனைகளை மாநில கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கும் திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் எழுதிய புத்தகங்களை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற உத்தரவு வெளியாகியிருக்கிறது.