மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகுமாரன் என்பவர், மேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற தன்னை தாக்கிய டிஎஸ்பி மீது மேலூர் நீதித்துறை நடுவரின் உத்தரவின் அடிப்படையில் மேலூர் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி புகழேந்தி, “வழக்கறிஞரை கடந்த 2022-ம் ஆண்டு டிஎஸ்பி அலுவலகம் முன்பாக வைத்து தாக்கியுள்ளார்கள். இது தொடர்பாக மேலூர் காவல் நிலையத்தில் மனுதாரர் புகார் அளித்துள்ளார். இருப்பினும் வழக்கு பதிவு செய்யப்படாத நிலையில், மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க மேலூர் நீதித்துறை நடுவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு வழக்கறிஞரை காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ள சூழலில் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. மேலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை செய்யவில்லை. எனவே இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தென் மண்டல ஐ.ஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தாக்கல் செய்த அறிக்கையில், “உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக அறிவுறுத்தப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. இதில், டிஎஸ்பி ரவிக்குமார், தற்போது கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் உதவி ஆணையராக பணிபுரிந்து வருகிறார். ராஜபாளையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சார்லஸ், பேரையூர் எஸ்.ஐ ஜெயம் பாண்டியன், காவலர் கஜேந்திரன் உள்ளிட்டோர் மீது 166, 294(b), 323, 506(i) IPC உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு வழக்கு பதிய காலதாமதம் செய்த மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அக்காலகட்டத்தில் காவல் நிலைய அலுவலராக செயல்பட்டவர் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து நீதிபதி, “தென்மண்டல காவல்துறை ஐ.ஜி உடனடியாக நடவடிக்கை எடுத்ததை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. காவல்துறையிடம் புகார் அளித்தால் தங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என சாமானிய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், வழக்கறிஞரையே டி.எஸ்.பி காவல் நிலையம் முன்பாக வைத்து தாக்கியுள்ளார். உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 மாதங்கள் கடந்தும் காவல்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்படமில்லை, உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது போன்ற நடவடிக்கை, காவல்துறை அதிகாரிகள் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டால், அதில் தங்களுக்கு நீதி கிடைக்காது எனும் எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி விடுகிறது. தவறு செய்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கையை எடுத்து, காவல்துறையின் மரியாதையை பாதுகாத்தத தென் மண்டல ஐ.ஜி-க்கு நீதிமன்றம் மீண்டும் பாராட்டுகளை தெரிவிக்கிறது” என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88