‘அப்படா தங்கம் விலை இன்னும் இறங்குமுகத்தில் தான் இருந்து வருகிறது’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு, இன்று பவுனுக்கு ரூ.760 உயர்ந்து அதிர்ச்சியை அளித்துள்ளது தங்கம் விலை.
கடந்த வாரத் தொடக்கத்தில் பங்குச் சந்தை சாதக நிலையில் இல்லாமல் இருந்தாலும், தங்கம் விலை மக்களுக்கு மிகவும் சாதகமாகவே இருந்தது. ஆம், சென்செக்ஸ் புள்ளிகள் 2,200 புள்ளிகள் இறங்கிய அடுத்த நாள் தங்கம் விலை கிராமுக்கு ரூ.6,400-க்கு, பவுனுக்கு ரூ.51,200-க்கு விற்பனை ஆனது. இது மக்களுக்கு ஓரளவுக்கு ஆசுவாசத்தை தந்தது.
பின்னர் கொஞ்சம் ஏறியும், இறங்கியும் வந்த தங்கம் விலை இன்று ரூ.52,000-த்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.6,470-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.51,760-க்கும் விற்பனை ஆனது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.6,565-க்கும், பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.52,520-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி நேற்று ரூ.87.50-க்கு விற்பனையாகி கொண்டிருந்த நிலையில், இன்று ரூ.88.50-க்கும் விற்பனையாகி வருகிறது.
இதுவரை தங்கம் விலை வரலாற்றில் ரூ.55,000-த்தை தாண்டியுள்ளது. இப்போது உயரத் தொடங்கியுள்ள தங்கம் விலை மீண்டும் இந்த உயர்வை தொடுமா, தாண்டுமா அல்லது மேலே ஏறிய வேகத்திலேயே இறங்கிவிடுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.