நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரும், ஜோதி என்ற பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல், ஒரே வீட்டில் ‘லிவிங் டுகெதர்’ முறையில் தம்பதியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது மகள் ஆனி ரோஸ், 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அந்த அரசு ஊழியருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தெரிந்து கொண்ட ஜோதி, அவரை கண்டித்துள்ளார்.
ஆனலும், அவர் அந்தப் பெண்ணுடனான தகாத உறவை கைவிடவில்லை. இதனால் அரசு ஊழியருக்கும் ஜோதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று வாய்த்தகராறு முற்றியுள்ளது. இதில் சண்டை போட்டு அரசு ஊழியர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாராம். இதில் மனமுடைந்த ஜோதி, “உங்க அப்பாவுக்கு வேற ஒரு பொண்ணு கூட பழக்கம் இருக்கு.
அவர் இனிமேல் நம்மளை கவனிக்க மாட்டார். அன்பாகவும் இருக்க மாட்டார். அதனால் இரண்டு பேரும் தற்கொலை செய்து கொள்வோம்” எனச் சொல்லி மகளை அழைத்துச் சென்றுள்ளார். அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கல்லிடைக்குறிச்சி, பொன்மாநகரில் உள்ள கிணறு அருகே சென்றுள்ளனர். மகள் ஆனிரோஸை முதலில் கிணற்றுக்குள் குதிக்கச் சொல்லியிருக்கிறார். அச்சிறுமி தயங்கி நின்ற நிலையில், அவரை கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார்.
அதற்குப் பிறகு ஜோதியும் குதித்துள்ளார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றுக்குள் பார்த்தபோது ஜோதி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்கூறவே, தீயணைப்பு வீரர்கள் ஜோதியை உயிருடன் மீட்டனர். ஆனால், அவரது மகள் ஆனிரோஸ் தண்ணீரில் மூழ்கி இறந்தார். கணவனின் தகாத உறவால் மனமுடைந்து மகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.