மதுரை: `மிரட்டல்; சட்டவிரோத காவல்’ – பெண் ஆய்வாளர் மீதான புகாரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை பரவை மில் காலனியைச் சேர்ந்த கணேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். எனக்கு 2021-லிருந்து அறிமுகமான ஆடிட்டர் ராமநாதன், ராஜபாளையம் பகுதியில் சொத்து ஏதாவது இருந்தால் தெரிவிக்குமாறும், அதை மூர்த்தி என்பவர் வாங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை

இதையடுத்து ராஜபாளையம் பகுதியில் வங்கிக் கடன் செலுத்தாமல் பொது ஏலத்திற்கு வந்தத சொத்தை மூர்த்தி என்பவர் ரூ 4.01 கோடிக்கு வாங்கினார். இதற்கு கமிஷனாக  ரூ. 4 லட்சத்தை ஆடிட்டர் ராமநாதன் எனது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் கடந்த 25.7.2024 அன்று அதிகாலை 4 மணி அளவில் நான் மதுரை டோக் நகரிலுள்ள நண்பர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது, மதுரை அண்ணாநகர்  குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் (தற்போது இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்)  காவலர்களுடன் அங்கு வந்து என்னை, அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 

போலீஸ்

அதிகாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரை அடைத்து வைத்தனர். அப்போது, காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் என்னிடம், ‘மூர்த்தி மீது பல வழக்குகள் இருப்பதால் அந்த வழக்குகளில் என்னை சேர்க்காமல் இருக்க, ரூ 4 லட்சம் பணம் கொடுக்க வேண்டும்’ என்றார். ‘எனக்கும், மூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆடிட்டர் ராமநாதன் சொல்லி தான் மில்லை மூர்த்திக்கு வாங்கி கொடுத்தேன், அதை தவிர மூர்த்திக்கும், எனக்கும் வேறு எந்த தொடர்பு இல்லை’ என்றேன்.

அதைக் கேட்காமல் பணம் தராவிட்டால் மூர்த்தி மீது உள்ள அனைத்து வழக்குகளிலும் என்னையும் குற்றவாளியாக சேர்ப்பதாக கூறி மிரட்டினார். பின்னர் என்னை வீட்டுக்கு போக விடாமல் இரண்டு நாள் தனியார் தங்கும் விடுதியில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டினார். காவலர் ரவி என்பவரை பக்கத்து அறையில் தங்க வைத்து கண்காணித்தார். உணவு, தண்ணீர் கூட தராமல் சித்திரவதை செய்தனர்.

நான் சர்க்கரை நோயாளி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டேன். அதற்கான மாத்திரைகளை வீட்டிலிருந்து எடுத்து வந்து கொடுக்க விடாமல் தடுத்து, காவல் ஆய்வாளர் சிலிவியா ஜாஸ்மின் கடுமையாகவும் கொடூரமாகவும் நடந்து கொண்டார். மறுநாள் என்னுடைய உடல்நிலை மோசமானதால் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்றேன். அங்கு வந்த காவல் ஆய்வாளர் சிலிவியா ஜாஸ்மின், ‘இரண்டு நாளில் ரூ.15 லட்சம் கொடுக்காவிட்டால் என்னையும், என் மனைவியையும் மூர்த்தி சம்பந்தப்பட்ட வழக்குகளில் சேர்த்து கைது செய்து சிறையில் அடைப்பேன்’ என்று மிரட்டினார்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

பின்னர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி எனக்கு சிகிச்சை அளிக்க விடாமல் தடுத்தார். அடிக்கடி என் வீட்டிற்கு ஆட்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுகிறார். என்னை காவல் நிலையத்தில் ஒரு நாள் முழுவதும் சட்ட விரோதமாக சிறை வைத்தது மட்டுமின்றி தொடர்ந்து என்னையும், என் மனைவியையும் பணம் கேட்டு மிரட்டி வரும் காவல் ஆய்வாளர் சிலிவியா ஜாஸ்மின் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்…” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதியரசர் கே.முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தபோது, “காவல் ஆய்வாளர் சிலிவியா ஜாஸ்மின் மனுதாரரை காவல் நிலையத்திலும், தனியார் விடுதியிலும் சட்ட விரோதமாக அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “காவல் ஆய்வாளர் மீது கடுமையான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதனால் மனுதாரரின் புகார் மனுவை மதுரை மாநகர் காவல் ஆணையர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சம்பந்தப்பட்ட நாட்களின் அண்ணாநகர் காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை பாதுகாக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு மதுரை காவல்துறைக்குள் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88