`அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62-ஆக உயர்த்தப்படுகிறதா? – என்ன சொல்கிறது தமிழ்நாடு அரசு?

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி ஓய்வுப் பெறும் வயது 58. சில நேரங்களில் உயர் பதவிகளுக்கு பதவி நீட்டிப்புகள் வழங்கப்படும். இந்த நிலையில், அ.மு.மு.க தலைவர், டி.டி.வி தினகரன், “தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதால், ஏற்கெனவே அரசுப் பணியில் இருப்பவர்களுக்கான பதவி உயர்வு பாதிக்கப்படுவதோடு, அரசுப் பணி கனவில் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமும் அடியோடு சீர்குலையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பலரும் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மைக் கண்டறியும் குழுவான தமிழ்நாடு ஃபேக்ட் செக், இது முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்தியில், “அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-க மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. வயதை அதிகரிக்க எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வதாக வெளியாகும் தகவல் வதந்தி. தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு குறித்து எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.