`வயநாட்டில் ஏற்பட்ட பேரிடரை, முல்லைப்பெரியாறு அணையுடன் முடிச்சு போடுகிறார்கள்’ – ஆர்.பி.உதயகுமார்

“கேரள அரசியல்வாதிகள் அரசியல் காழ்புணர்ச்சியோடு ஆதாரமில்லாத கருத்துகளை, கற்பனை கதைகளை, தொடர்ந்து ஆடியோ, வீடியோவாக வெளியிட்டுக் கொண்டே இருப்பது, அச்சத்தை ஏற்படுத்துகிறது…” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப்பெரியாறு அணையை நம்பி தென் தமிழகத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு முல்லைப்பெரியாறு வரப்பிரசாதமாக, வறட்சியைப் போக்கும் அட்சயப் பாத்திரமாக இருக்கிறது.

முல்லைப்பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டதாக, 1979 முதல் கேரள அரசியல்வாதிகள் பிரச்னை செய்து வருவது, தொடர்ந்து கொண்டே இருக்கிறது

எப்பொழுதெல்லாம் கேரளாவில் இயற்கை சீற்றம் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்தும், கற்பனை கதைகளை கட்டவிழ்த்தும் ஆதாரமற்ற வீடியோக்களை வெளியிடுவதை கேரள அரசியல்வாதிகள் வழக்கமாக்கி, மக்களை தூண்டி விடுகிறார்கள். அணை கேரளாவில் இருந்தாலும், கட்டுப்பாடு முழுவதும் தமிழக நீர்வளத் துறையிடம்தான் உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை ஜெயலலிதா பெற்று தந்தார். அதன் மூலம் அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம், பேபி அணை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற தீர்ப்பைப் பெற்றுத் தந்தார்.

இதற்காகத்தான் தென் மாவட்ட விவசாயிகள் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து, மதுரையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தினார்கள். 2014-ம் ஆண்டு அக்டோபரில் பெய்த கன மழையால் கண்காணிப்பு குழுவினர் முன்னிலையில் அணை 142 அடியாக நிலை நிறுத்தப்பட்டது.

அதன் பின் ஒவ்வொரு மாதமும் மத்திய கண்காணிப்பு குழுவினரும், துணைக் கண்காணிப்பு குழுவினரும் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த வண்ணம் உள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணை

அணை பலமாக இருக்கிறது என்று சொன்னதற்கு பிறகும் அணையின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்தை எழுப்பி, நிதி ஒதுக்கீடு செய்து, அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு என்று கேரளா மக்களிடத்தில் தவறான செய்தியை பரப்பி, பதட்டத்தை உண்டாக்கி இரண்டு மாநில மக்களிடத்தில் இருக்கிற சகோதர உறவை கேள்விக்குறியாக்கி சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட்டுக்கொண்டே இருப்பதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல.

தென் மாவட்ட மக்களின் ஜீவவாதார உரிமையான முல்லைப்பெரியாறு அணையை, சட்டப் போராட்டம் நடத்தித்தான் மீட்டெடுத்திருக்கிறோம்.

கேரள அரசியல்வாதிகள் அரசியல் காழ்புணர்ச்சியோடு ஆதாரமில்லாத கருத்துகளை, கற்பனை கதைகளை, தொடர்ந்து ஆடியோ, வீடியோவாக வெளியிட்டுக் கொண்டே இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஆர்.பி.உதயகுமார்

சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரை முல்லைப்பெரியாறு அணை பிரச்னையுடன் முடிச்சு போட்டு. இடுக்கி எம்.பி உள்ளிட்ட கேரளா அரசியல்வாதிகள் வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருவது, மிகவும் வருந்தத்தக்கது. இது குறித்து தமிழக அரசு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். தமிழக மக்களுக்கு முல்லைப்பெரியாறு அணை குறித்து நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையில் உரிய விளக்கத்தை வெளியிட்டு, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சர் முன் வருவாரா என்று தென் தமிழக மக்கள் கேட்கிறார்கள்.

ஜெயலலிதா பெற்று தந்த அந்த தீர்ப்பை நிலை நிறுத்த முல்லைப்பெரியாறு குறித்து வாய் திறக்காமல் முதலமைச்சர் மௌனம் சாதிக்கும் மர்மம் என்ன?” என்று குறிப்பிட்டிருக்கிறார்.