அடுத்தடுத்து மோசடிப் புகார்கள்… பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட MyV3Ads ஆப்!

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு MyV3Ads நிறுவனம் இயங்கி வந்தது.செல்போனில் வீடியோ பார்த்தால் பணம் என்று நூதனமுறையில் இறங்கினார்கள். “ரூ.360 முதல் ரூ.1,21,000 வரை பல பிரிவுகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டுக்கு தகுந்த வகையில் தினசரி ரூ.5 முதல் ரூ.1,800 வரை சம்பாதிக்கலாம்.” என்று விளம்பரப்படுத்தினர்.

கோவை

இந்த ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்த அதேநேரத்தில், அவர்கள் மீதான மோசடி புகார்களும் அதிகரித்தன. காவல்துறையினரும் அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்தனர்.

MyV3Ads நிறுனத்தின் நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தன், நிறுவனர் விஜய ராகவன் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. ‘நாங்கள் அக்மார்க் தங்கம்’ என அவர்களுக்கு அவர்களே சான்றிதழ் கொடுத்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

MyV3Ads சக்தி ஆனந்தன்

இந்நிலையில் MyV3Ads ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கெனவே பணம்  வருவதில்லை. நிர்வாக இயக்குநர் சிறையில் இருக்கிறார். இயக்குநர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள். போட்ட பணத்துக்கு முறையான பதில் வராத நிலையில், முதலீட்டாளர்கள்  பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளிக்க தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில், “வழக்கு நடந்து கொண்டிருப்பதால் ஆப் தற்காலிகமாகவே நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

MyV3Ads உறுப்பினர்கள்

இது வழக்கமான நடைமுறைதான். நம் நிர்வாக இயக்குநர் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் எல்லாம் விரைவில் சரியாகிவிடும்.” என அந்த நிறுவனத்தின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.