நாடாளுமன்றத்தில் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வியில், “சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்காக அளிக்கப்பட்ட அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீட்டின் நிலை என்ன?. அந்த நிதியை ஒதுக்குவதில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட தாமதத்துக்கான காரணம் என்ன?, இந்த விஷயங்களில் தமிழக அரசின் வேண்டுகோள்களுக்கு மத்திய அரசின் பதில், பிற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி எவ்வளவு என்கிற விவரங்களை தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் தோகன் சாஹூ அளித்துள்ள எழுத்துபூர்வமான பதிலில், “118.9 கி.மீ. நீளம் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தை ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழக அரசு முன்மொழிந்திருந்தது. இதற்கு மிகவும் ஆழமான சாத்தியக்கூறு ஆய்வு, வளங்களின் இருப்பு போன்றவை அடிப்படையில்தான் ஒப்புதல் தர முடியும். தற்போது இந்த திட்டம் மாநில துறை திட்டமாக நடக்கிறது. எனவே அதன் செயலாக்கத்துக்கான செலவினத்தை தமிழக அரசே ஏற்கிறது என்று ஏற்கெனவே ஒரு கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
நிதி ஒதுக்கீட்டைப் பொருத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லி, பெங்களூரு, பாட்னா, மும்பை, ஆமதாபாத், கான்பூர், ஆக்ரா ஆகிய நகரங்களில் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்த 2019 முதல் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் சென்னையில் திட்டத்தை செயல்படுத்த 2022-23, 2024 ஆகிய நிதியாண்டுகளில் எந்த தொகையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. 2019-ல் ரூ.1,380.4 கோடி, 2020-21-இல் ரூ.51 கோடி, 2021-22ல் ரூ.935.78 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது” என சொல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், “இதன் மூலம் மாற்றான் தாய் மனப்பான்மையுடன்தான் தமிழகத்தை மத்திய அரசு பார்க்கிறது என்பது தெளிவாகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் பலமுறை தமிழகத்துக்கு மோடி வந்தார். ஆனால் ஓட்டு கிடைக்கவில்லை என்றதும் நிதி ஒதுக்கீடு செய்யாமல் கையை விரித்து விட்டார்கள். இரண்டு ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில்தான் மென்பொருள் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன.
ஆனால் மற்ற இரண்டு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் கொஞ்சம் கூட தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் எங்களை வெற்றிபெற வைக்கவில்லை. அதனால் நிதி ஒதுக்கவில்லை என சொல்கிறார்கள். மக்கள் நெருக்கம், பொருளாதார ரீதியான தேவைகள், வேலைவாய்ப்பு இவையனைத்தும் சென்னையை சுற்றி நடக்கிறது என்பது மத்திய அரசுக்கு தெரியும். ஆகவே மெட்ரோ திட்டத்தை வாக்கு அரசியலாக பார்க்காமல் உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் கவிஞர் சல்மா, “தமிழகத்திற்கு இரண்டு ஆண்டுகளில் எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. மக்கள் வாக்களிக்கவில்லை என்பதால் மாநில அரசை பழிவாங்குவதாக நினைத்து மக்களின் வரிப்பணத்தை திரும்பி வழங்காமல் இருக்கிறார்கள். இதன் மூலம் தமிழக மக்களுக்கு ஒன்றிய அரசு துரோகம் செய்து வருகிறது. அனைவருக்கும் பொதுவானதுதான் ஒன்றிய அரசு. ஆனால் தமிழகத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள மறுப்பது மிகப்பெரிய துரோகம், அநீதியாகவே நாங்கள் பார்க்கிறோம்.
இதேபோல்தான் எய்ம்ஸ் விவகாரத்திலும் செய்கிறார்கள். இதன் மூலம் மக்களின் நலனுக்காக அவர்கள் ஆட்சி செய்யவில்லை என்பது தெளிவாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்த அமித் ஷா சம்பந்தப்பட்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார். ஆனாலும் வாக்கு கிடைக்கவில்லை என்பதால் மாறிவிட்டார்கள்” என்றார்.
இறுதியாக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி தரவில்லை. ஒப்புதல் அளிக்காத திட்டத்திற்கு ஏன் பணம் ஒதுக்கீடு செய்யவில்லை என இவர்கள் எப்படி கேட்கிறார்கள். ஏன் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவேளை மத்திய அரசு திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்து, பணம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் கேட்கலாம். மத்திய அரசு கூறியுள்ள காரணத்தை சரிசெய்து ஒப்புதல் பெற முதலில் முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88