50 நாளில் 100+ தமிழக மீனவர்கள்; கொத்துக் கொத்தாக கைது – கண்டனத்தோடு நிற்கபோகின்றனவா அரசுகள்?!

இரண்டே மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது!

மீன்பிடி தடைக் காலம் முடிந்து கடந்த ஜூன் மாதம் முதல் தமிழ்நாடு மீனவர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால், எதிர்பாராத விதமாக ஜூன் 17-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து கைதுசெய்தனர். அதைத்தொடர்ந்து ஜூன் 25-ம் தேதி நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை படகுடன் கைதுசெய்து கொண்டுசென்றது இலங்கை கடற்படை. அதற்கடுத்த ஒருவாரத்துக்குள் ஜூலை 1-ம் தேதி ராமேஷ்வரம் மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டனர். இப்படியாக தொடர்ந்து இரண்டு வாரத்துக்குள் 61 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜூலை 23-ம் தேதி மீண்டும் 9 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக ஒரு மாதத்தில் சுமார் 89 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில்தான், ஜூலை 31-ம் தேதி நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களின் படகை இலங்கை கடற்படை கப்பல் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் மலைச்சாமி என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். ராமச்சந்திரன் என்ற மற்றொரு மீனவர் காணமல் போக, இன்றுவரையிலும் அவரின் உடல் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கம்போல மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்துவந்த மத்திய அரசு, உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இலங்கை தூதரை அழைத்து கண்டனத்தைப் பதிவு செய்தது. அதன்பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் எதுவம் நடக்காது என நம்பிய மீனவர்கள் தைரியமாக மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆனால், ஆகஸ்ட் 3-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அதையடுத்து தமிழக எம்.பி.க்கள் பலரும் நாடாளுமன்றத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது உள்ளிட்டவற்றை தடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். மேலும், இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் 175 தமிழகப் படகுகளையும், 80-க்கும் மேற்பட்ட மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில்தான் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த 33 மீனவர்களையும், 4 நாட்டுப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றிருக்கிறது இலங்கை கடற்படை.

கைது செய்யப்பட்டிருக்கும் 33 தமிழக மீனவர்கள்

இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருப்பதோடு, மத்திய, மாநில அரசுகள் இனியாவது நடவடிக்கையை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர். குறிப்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பதும், மாநில விடியா திமுக அரசு போதிய அழுத்தம் கொடுக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்தம் உடைமைகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுவதோடு நில்லாமல், தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை மனதிற்கொண்டு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் நிரந்தர தீர்வை எட்டுமாறு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறேன்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், “கடந்த சில தினங்களுக்கு முன்பாக இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை பதிவு செய்த பின்னரும் இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கு தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதோடு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் மீட்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் 4 நாட்டுப் படகுகள்

மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,“ சிங்களக் கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு இந்தியா பாடம் புகட்டப் போவது எப்போது? கடந்த 50 நாட்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 109 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களில் 52 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 57 பேரும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களில் படகு ஓட்டுனர்கள் மூவருக்கு தலா ரூ.40 லட்சம் வீதம் இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்திருக்கிறது; உடனடியாக அபராதம் செலுத்தாவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டாவது முறையாகவும், மூன்றாவது முறையாகவும் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கு 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு அரசியல்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதற்காக இத்தகைய உத்திகளை இலங்கை பயன்படுத்துகிறது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பன்னாட்டு விதிகளுக்கு எதிரானது. இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. இத்தகைய சூழலில் தமிழக மீனவர்களை கைது செய்து தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சிங்களக் கடற்படைக்கு இந்தியா கடுமையான பாடம் புகட்ட வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.!” எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அதேபோல சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “மீனவர்களின் வாழ்வாதாரத்தை நெருக்கடியில் தள்ளும் இத்தகைய தொடர் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்திய அரசாங்கம் முனைப்புடன் செயல்பட்டு நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுடன் இலங்கை கடற்படையின் போக்கிற்கு முடிவுகட்ட வேண்டும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88