வக்பு சட்டத் திருத்த மசோதா: திருத்தப்பட்ட அம்சங்கள் என்னென்ன?!

முஸ்லிம் சமுதாயப் பெருமக்கள், செல்வந்தர்களால் பொது மக்களின் பயன்பாட்டுக்காக இறையருள் நாடி, தங்கள் பகுதிகளில் இருக்கும் மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் பெயரில் தானமாக வழங்கப்பட்டவையே வக்பு சொத்துகள். அவை அசையும் சொத்துகளாகவும், அசையா சொத்துகளாகவும் இருக்கின்றன.

நாடாளுமன்றம்

இந்தியாவில், பாதுகாப்புத் துறை, இந்திய ரயில்வே ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமான நிலங்களைக் கொண்டிருப்பது வக்பு வாரியம்தான் என சொல்லப்படுகிறது.

வக்பு சொத்துக்களைக் கண்காணிப்பது அரசின் கடமை என்று கருதி, 1954-ம் ஆண்டு  நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் இயற்றப் பட்டது. அதன் பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் 1958-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன. 1954-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம், 1995-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் அவற்றை கண்காணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றன. வக்பு சட்டம், 1995 என்று அது குறிப்பிடப்படுகிறது.  

தர்கா | ஆளுநர் ரவி

இந்த நிலையில், வக்பு வாரியத்தின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும், வக்பு வாரியம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்று கூறி, அதற்கான மசோதாவை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கிறது.

‘வக்பு (திருத்தம்) மசோதா, 2024’ என்று பெயரிலான மசோதாவை, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். அதன்படி, ‘வக்பு சட்டம், 1995 என்பது ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு சட்டம், 1995’ என்று அது பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. வக்பு வாரியத்துக்கு நிலத்தைக் கொடுப்பவர், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைத்ப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.

மசூதி

இந்த மசோதாவில், வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது, முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. வக்பு கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்பு வாரியத்திலும் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டுவரப்படுகிறது.

இந்த மசோதாவில், மாவட்ட ஆட்சியருக்கு முக்கிய அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, வக்பு சட்டம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் முஸ்லிமாக இல்லையென்றாலும், வக்பு வாரியத்தின் சொத்து விவகாரங்களில் இறுதி முடிவுகளை அவரால் எடுக்க முடியும்.

மசூதி

வக்பு சொத்துகள் இந்த மசேதாவின்படி, வக்பு நிலத்தை அளவீடு செய்யும் கூடுதல் ஆணையரின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு, அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்படும்.

‘மத்திய வலைத்தளம், தரவுத்தளம் மூலமாக வக்பு வாரிய சொத்துகள் பதிவு முறைப்படுத்தப்பட வேண்டும். வக்பு நிலங்களை டிஜிட்டல் முறையில் பட்டியலிடுவதற்கு சட்டத்தில் வழிவகுக்கப்படுகிறது. வக்பு நிலமாக அறிவிக்கப்படும் முன்பு சம்பந்தப்பட்டோருக்கு தகவல் அளிக்கும் விதத்தில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. போரா, அகாகானிஸ் ஆகிய பிரிவினருக்க தனி சொத்து வாரியம் உருவாக்கப்படும்‘ என்ற திருத்தங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றிருக்கின்றன.

ஜாமா மசூதி

வக்பு சட்டத்தில் சுமார் 40 திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. முஸ்லிம்களிடமிருந்து வக்பு வாரிய சொத்துக்களை அபகரிப்பதற்கான, சட்டத் திருத்தங்களை பா.ஜ.க கொண்டுவருகிறது என்று இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டுகின்றன. இந்தத் திருத்தங்கள் மூலமாக, வக்பு வாரியத்தின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக விமர்சனம் எழுந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88