வக்பு (Waqf) சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதில், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் அல்லாதோர் வக்பு வாரியத்தில் இடம்பெறச் செய்வது, வக்பு நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரம் கூடுதல் ஆணையரிடமிருந்து திரும்பப் பெறப்பட்டு, அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இடம்பெற்றிருக்கிறது.
இதனை, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்துவருகின்றன. இந்தநிலையில், வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய பா.ஜ.க எம்.பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பிறப்பித்த இந்த உத்தரவில், மக்களவையிலிருந்து திமுக எம்.பி ஆ.ராசா, AIMIM எம்.பி ஒவைசி உள்ளிட்ட 21 உறுப்பினர்களும், ராஜ்ய சபாவிலிருந்து 10 உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். மேலும், இந்தக் குழு தனது ஆய்வறிக்கையில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முதல் வாரத்தின் கடைசி நாளில் தாக்கல் செய்யும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.