இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகள் விலை கிடுகிடு… கோவையில் 38% அதிகரிப்பு! என்ன காரணம்?

நம் நாட்டில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் வீடுகளின் விலை 94 சதவீதம் என இரட்டை இலக்கத்தில் உயர்ந்துள்ளது.

நாட்டில் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புனே உள்ளிட்ட பெருநகரங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், இரண்டாம் நிலை நகரங்களிலும் இதே போக்கு காணப்படுகிறது.

அடுக்குமாடி வீடுகள்

இன்றைய காலகட்டத்தில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. இதனால் விற்பனை மற்றும் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலரும் சொந்தத் தேவை மற்றும் முதலீட்டு நோக்கில் வீடு, மனை வாங்குவதுதான் விலை அதிகரிப்புக்கு காரணம்.

சந்தை ஆலோசனை நிறுவனமான ‘ப்ராப்ஈக்விட்டி’ வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாம் நிலை நகரங்களில் எந்தளவுக்கு விலை உயர்ந்துள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, 2019-20ஆம் நிதியாண்டுடன் ஒப்பிட்டால் 2023-24-ஆம் நிதியாண்டில் இரண்டாம் நிலை நகரங்களில் வீட்டு மனை விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், கொச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், மங்களூரு, மைசூர், அமிர்தசரஸ், மொஹாலி, லூதியானா, சண்டீகர், ஜெய்ப்பூர், ஆக்ரா, லக்னோ, இந்தூர், புவனேஸ்வர், அகமதாபாத், காந்தி நகர், சூரத், நாசிக், நாக்பூர், கோவா உள்பட நாட்டின் முதல் 30 இரண்டாம் நிலை நகரங்களில், வீடுகளின் விலை உயர்ந்துள்ளது.

வீடு

குறிப்பாக, 24 இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை இரட்டை இலக்க வளர்ச்சியை அதாவது, 54 சதவீதம் முதல் 94 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. எஞ்சிய நகரங்கள் விலை உயர்வு ஒற்றை இலக்கத்தில் உயர்ந்துள்ளது.

உலக அதிசயமான தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ராவில், 2019-20 ஆம் ஆண்டில் சதுர அடி ரூ.3,692-ஆக இருந்த வீடுகள் விலை 2023-24ஆம் ஆண்டில் 94 சதவீதம் அதிகரித்து ரூ.7,163 ஆக உள்ளது.

சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற கோவாவில் 90 சதவீதம், தொழில்துறையில் முன்னணியில் உள்ள லூதியாணாவில் 89 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தூரில் 72, சண்டீகரில் 70, அகமதாபாத்தில் 60, மங்களூரில் 57, திருவனந்தபுரத்தில் 54 சதவீதம் என வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

ரியல் எஸ்டேட்

அதேபோல், மைசூரில் 53 சதவீதம், காந்தி நகரில் 49%, கொச்சியில் 43%, கோவையில் 38%, ராய்பூரில் 26 சதவீதம், விசாகப்பட்டினம் நகரில் 11 சதவீதம் என வீடுகளின் விலை உயர்ந்துள்ளதாக, ப்ராப்ஈக்விட்டி அறிக்கை தெரிவித்துள்ளது.