திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தின் கணக்கு பிரிவு இளநிலை உதவியாளர் சரவணன். இவர் வரி வசூலில் இருந்து 2 லட்சம் ரூபாயைக் கையாடல் செய்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து 2021-ம் ஆண்டு முதல் கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. இதில் சரவணன் மொத்தம் 4.66 கோடி ரூபாய் வரை கையாடல் செய்திருப்பதாக புகார் எழுந்தது.
விசாரணை நடத்திய மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பணத்தைக் கையாடல் செய்த சரவணன், அதனை கண்காணிக்கத் தவறிய கண்காணிப்பாளர் சாந்தி, நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ், உதவியாளர் சதீஸ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தார். மேலும் பணம் கையாடல் தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சரவணனைக் கைதுசெய்து மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய சாந்தி, வில்லியம் சகாயராஜ் ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்து, விசாரிக்கின்றனர். இதற்கிடையே தி.மு.க-வைச் சேர்ந்த மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் விசாரித்து, மக்களின் வரிப்பணத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் நிதி இல்லை எனக் கூறி, போதிய குடிநீர், ரோடு, சாக்கடை வசதி செய்துதரப்படாத நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பது திண்டுக்கல் மக்களை விரக்தியடைய வைத்திருக்கிறது. இதனால் வரிப்பணம் மட்டும் கையாடல் செய்யப்பட்டிருக்கிறதா, நலத்திட்ட நிதிகளும் கையாடல் செய்யப்பட்டிருக்கிறதா என முழுமையான தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.