மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேப் பட்டாச்சார்யா (80) இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்தார்.
1977 முதல் 2011 வரை மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியில் முக்கிய நபராக விளங்கிய இவர், 2000 முதல் 2011 வரை மாநிலத்தின் முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார்.
மேலும், மேற்கு வங்கத்தில் கடைசி முதல்வராகப் பதவிவகித்த கம்யூனிஸ்ட் தலைவரான புத்ததேப் பட்டாச்சார்யா, 2016-க்கு பிறகு தேர்தல் பிரசார மேடைகளில் தோன்றவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலின்போது கூட அவரின் ஆடியோ க்ளிப் வெளியிடப்பட்டது.
அதற்குப் பிறகு, கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலின்போது புத்ததேவ் பட்டாச்சார்யா, கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்பது போல AI தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வீடியோ ஒன்றை கட்சி வெளியிட்டிருந்தது. இத்தகைய சூழலில், கடந்த பல ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த புத்ததேப் பட்டாச்சார்யா, இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்தார்.