திருப்பூர் கோர்ட் வீதியில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஊரக வளர்ச்சித்துறை முகமையின், திருப்பூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஊராட்சிகளில் நடந்து முடிந்த வளர்ச்சிப் பணிகளுக்கான பில்லை வழங்க ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அறைகளில் இருந்த டேபிள், டிரா ஆகிய பகுதிகளில் சோதனை செய்தனர். அதில், ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளரிடம் இருந்து கணக்கில் வராத 86,000 ரூபாயும், உதவிப் பொறியாளரிடம் இருந்து 16,300 ரூபாயும் என மொத்தம் ரூ.1,02,300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.